Gujarat Drugs: மீண்டுமா..! குஜராத்தில் சிக்கிய 518 கிலோ கொக்கைன் - மொத்த மதிப்பு ரூ.5,000 கோடி என தகவல்
Gujarat Drugs: குஜராத்தில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gujarat Drugs: குஜராத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் சுமார் 518 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரூ.5,000 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்:
குஜராத்தில் நடைபெற்ற கூட்டு தேடுதல் வேட்டையில் மீண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.ம் டெல்லி காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறையின் கூட்டுக் குழு, அங்கலேஷ்வரில் உள்ள ஆவ்கார் மருந்து நிறுவன வளாகத்தில் சோதனை நடத்தியது. இதில், சுமார் 518 கிலோ எடையிலான போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சமீபத்தில், டெல்லியில் இரண்டு இடங்களில் நடத்திய சோதனையில் 700 கிலோவுக்கும் அதிகமான கொக்கைனை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Bharuch, Gujarat: Delhi Police Special Cell and Gujarat Police recovered 518 kg of cocaine during a search of a drug-related company in Ankleshwar, Gujarat. Its value in the international market is around Rs 5,000 crore...So far, a total of 1,289 kg cocaine and 40 kg… https://t.co/s73aKaoXNi pic.twitter.com/O7nMEl2go6
— ANI (@ANI) October 14, 2024
அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்:
அக்டோபர் 2ஆம் தேதி தெற்கு டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து 560 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானாவை சிறப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த குமார் (27), ஔரங்கசீப் சித்திக் (23), மும்பையைச் சேர்ந்த பாரத் குமார் ஜெயின் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அமிர்தசரஸ் மற்றும் சென்னையில் இருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 5 ஆயிரத்து 620 கோடி ரூபாயாகும்.
அக்டோபர் 10ம் தேதி ரமேஷ் நகர் பகுதியில் நடந்த சோதனையில், மேலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் மீட்கப்பட்டது. 'டேஸ்டி ட்ரீட்' மற்றும் 'சட்பட்டா மிக்சர்' என எழுதப்பட்ட தின்பண்டங்களின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குள் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
நீளும் பறிமுதல் நடவடிக்கைகள்:
விசாரணையில், அந்த மருந்துகள் பார்மா சொல்யூஷன் சர்வீசஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும், குஜராத்தில் உள்ள அவ்கார் டிரக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சோதனையில் தான் 500 கிலோவிற்கும் அதிகமான கொக்கைன் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இந்த வழக்கில் மொத்தம் 1,289 கிலோ கொகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் தாய் (Thai) மரிஜுவானா மீட்கப்பட்டுள்ளது, இதன் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடி ஆகும்.