Andhra Pradesh: உஷார்! சார்ஜ் போட்டுக்கொண்டே மடிக்கணினி வேலை.. படாரென வெடித்த லேப்டாப்!
ஒய்.எஸ்.ஆர் மாவட்டத்தின் பி.கோடுரு மண்டலத்தில் உள்ள மேகவரிபள்ளே என்ற இடத்தில் கடந்த திங்கள்கிழமை மடிக்கணினி வெடித்து சிதறியதில் மென்பொருள் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
ஹைதராபாத் : ஒய்.எஸ்.ஆர் மாவட்டத்தின் பி.கோடுரு மண்டலத்தில் உள்ள மேகவரிபள்ளே என்ற இடத்தில் கடந்த திங்கள்கிழமை மடிக்கணினி வெடித்து சிதறியதில் மென்பொருள் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
சாப்ட்வேர் ஊழியரான சுமலதா, தனது லேப்டாப்பை சார்ஜ் ஏற்றிக் கொண்டே வேலை செய்தபோது, திடீரென அந்த லேப்டாப் தீப்பிடித்து வெடித்து சிதறியதாக தகவல் கிடைத்துள்ளது. லேப்டாப்பை தனது படுக்கையறையில் பயன்படுத்தி வந்துள்ளார். அப்பொழுது, லேப்டாப்பில் சார்ஜ் குறைவே, வேலை பார்த்துக்கொண்டே லேப்டாப்பில் சார்ஜ் போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.
திடீரென மின்சாரத்தை லேப்டாப்பில் பொருத்திய சில விநாடி நேரத்தில் மடிக்கணினி மின்சுற்று காரணமாக தீப்பிடித்து எரிந்து வெடித்துள்ளது. மடிக்கணினி வெடித்ததில் அந்த பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அமர்ந்திருந்த படுக்கையில் தீப்பிடித்தது என்று அறிக்கை கூறுகிறது.
படுகாயம் அடைந்த சுமலதாவை குடும்பத்தினர் மீட்டு கடப்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்களின் கூற்றுப்படி, அவர் 70-80 சதவீதம் தீக்காயங்களுக்கு ஆளானார். தற்போது அந்த இளம்பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது.
கொரோனா தொற்றுநோய் தணிந்தாலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்னும் தங்கள் ஊழியர்களை வேலைக்கு அழைக்கவில்லை. சில நகரங்களில் தினசரி செயல்பாடுகளை இயக்க, மென்பொருள் நிறுவனங்கள் ஒரு சுழற்சி முறையில் உத்தியை கையாண்டு வருகிறது. பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்கிறார்கள். முன்னதாகவே லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வைத்து வேலை செய்வது பாதுகாப்பான ஒன்று என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது கோடை காலம், எனவே மின் தடைகள், மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள், சூரிய ஒளி, மற்றும் பிற காரணிகள் மடிக்கணினி செயல்திறனை பாதிக்கலாம். கிஸ்மோடோவின் கூற்றுப்படி, மடிக்கணினி பேட்டரிகள் வெப்ப ரன்அவே எனப்படும் இயல்பான பயன்பாட்டு செயல்முறையின் காரணமாக வெடிக்கும். பேட்டரியால் கையாளக்கூடியதை விட அதிக வெப்பத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் போது தெர்மல் ரன்வே வெடிப்புக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக லேப்டாப்பை படுக்கும் மெத்தையில் வைத்துக்கொண்டு பயன்படுத்துவது ஆபத்தானது. மெத்தை அல்லது தலையணையில் வைத்து பயன்படுத்துவதால் லேப்டாப்புக்கு சரியான காற்றோட்ட வசதி கிடைப்பதில்லை. லேப்டாப்பின் அடிப்பகுதியில் காற்று சென்று வர வசதியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். டேபிளில் பயன்படுத்தலாம் அல்லது மடிக்கணினிக்கென தனியாக உள்ள ஸ்டேண்டுகளை வாங்கி பயன்படுத்தலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்