ஆந்திரா: 30 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டவை! 14,000 கிலோ கஞ்சாவை எரித்த போலீசார்!
கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாகப்பட்டினம் நகர காவல் துறையினர் கடந்த 6 மாதங்களில் 70 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகரித்த கஞ்சா புழக்கம்
கஞ்சா புழக்கம் நாடு முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில் அதற்கெதிராக நடவடிக்கைகளும் கெடுபிடியாக்கப் பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் போலீசார் கஞ்சாக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்பவர்கள் மற்றும் உற்பத்தி செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை யாருக்கும் கிடைக்காத வகையில் எரித்துவிடக் கூறி நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் பல மாநிலங்களில் அவற்றை எரிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
124 கிலோ கஞ்சா மீட்பு
ஒரு காவல்நிலையத்தில் பறிமுதல் செய்த கஞ்சாக்களை எலி தின்றுவிட்டதாக கூட செய்திகள் சென்ற மாதம் வந்தன. அந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர். விசாகப்பட்டினம் நகர காவல்துறை அதிகாரிகள் 7 பேரை கைது செய்து, 124 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர்.
7 பேர் கைது
அதனை வைத்திருந்தவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில் ரோப்வேயின் வாகன நிறுத்துமிடத்தில் மாநகர அதிரடிப்படை போலீசார் சோதனை நடத்திய நிலையில் இந்த 7 பேர் 124 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Andhra Pradesh | Police burnt 14,000 kg of ganja seized in various cases during the last 30 years, in the presence of Vijayawada Police Commissioner Kanthi Rana Tata in the NTR district pic.twitter.com/x4bwrAV2dg
— ANI (@ANI) December 25, 2022
6 மாதங்களில் 70 பேர் கைது
கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாகப்பட்டினம் நகர காவல் துறையினர் கடந்த 6 மாதங்களில் 70 பேரை கைது செய்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் ஏஎஸ்ஆர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலேரு போலீஸார் கஞ்சா கடத்தியதற்காக இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒரு பொறியியல் பட்டதாரி உட்பட நான்கு பேரைப் பிடித்தனர். இரண்டு பொட்டலங்களில் நான்கு கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், 750 ரூபாய் ரொக்கம் மற்றும் தெலுங்கானா தகடு தாங்கிய நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் கூறுகையில், குற்றவாளிகள் சிலேருவில் இருந்து பத்ராசலம் வழியாக ஹைதராபாத் வரை காரில் கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.