கைது செய்யப்படுகிறாரா சந்திரபாபு நாயுடுவின் மகன்? ஆந்திர அரசியலில் மீண்டும் புயலை கிளப்பிய சிஐடி
தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் கூட இல்லாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இப்படிப்பட்ட சூழலில், அவரின் மகனும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.
ஆந்திராவை உலுக்கிய சந்திரபாபு கைது:
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியது.
சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு எதிராக தெலங்கு தேச கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆந்திர அரசியலில் உச்சக்க்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தது.
கைது செய்யப்படுகிறாரா சந்திரபாபு நாயுடுவின் மகன்?
இந்த நிலையில். நாரா லோகேஷ்-க்கு மாநில குற்ற புலனாய்வு துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள தெலுங்கு தேச கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதேவ் கல்லா வீட்டுக்கு சென்ற ஆந்திர மாநில குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ்-க்கு சம்மன் அளித்தனர்.
அமராவதி இன்னர் ரிங் ரோடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நேரில் அஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நாரா லோகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், சிஐடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியின் மாஸ்டர் பிளானை வடிவமைத்ததிலும் இன்னர் ரிங் சாலைகளை சீரமைத்ததிலும் ஆந்திர அரசில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிஐடி குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில்14ஆவது குற்றவாளியாக நாரா லோகேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாநில தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் கூட இல்லாத நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இப்படிப்பட்ட சூழலில், அவரின் மகனும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.