Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: முந்தைய ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அரசு திருமலை கோயிலை இழிவுபடுத்தியதாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
Chandrababu Tirupati: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
லட்டில் விலங்கு கொழுப்பு - சந்திரபாபு நாயுடு:
அமராவதியில் நடைபெற்ற தேசிய ஹனநாயக கூட்டண்யைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், புகழ்பெற்ற திருமலை லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சமரசம் செய்து கொண்டதாக விமர்சித்தார். பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் திருமலை லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். கோயிலில் பிரசாதம் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக, நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தூய்மையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் சந்திரபாபு கூறினார்.
சபதம் செய்த சந்திரபாபு:
முன்னதாக கடந்த ஜூன் மாதம், சந்திரபாபு நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருமலையில் இருந்து ஆட்சியை சுத்திகரிக்கும் பணியை தொடங்குவேன். திருமலையை களங்கப்படுத்துவதை ஏற்க முடியாது. கோவிந்த நாம சங்கீர்த்தனம் மட்டுமே திருமலையில் இருக்கும்” என சபதம் ஏற்றார்.
ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கண்டனம்:
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், திருமலா பிரசாதத்தில் சந்திரபாபு கருத்துகளை கொண்டு விஷமப்பிரசாரம் செய்ய வேண்டியது அவர்களின் அஜெண்டா. விஜயவாடா வெள்ளம் மீட்பு பணிகள் போன்றவற்றில் ஏற்பட்ட தோல்விகளை திசைதிருப்பவே, தற்போது திருமலா பிரசாதம் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது. இதன் மூலம், கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை சந்திரபாபு நாயுடு காயப்படுத்திவிடார்” என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முன்னாள் தேவஸ்தான தலைவர் கண்டனம்:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பூமனா கருங்கர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலையின் பிரசாதங்கள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவின் குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. கடவுளை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அரசியல் எதிரிகளை கடவுளின் பெயரால் குற்றம் சாட்டுவது சந்திரபாபுவுக்கு புதிதல்ல” என்று பூமனா தெரிவித்துள்ளார்.
குழப்பத்தில் பக்தர்கள்:
திருமலை என்பது மிகவும் தூய்மையான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு அசைவம் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. பக்தர்களும் கடும் விரதம் இருந்து, அந்த கோயில்களுக்கு நடைபயணமே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருப்பதி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது லட்டு தான். இந்த சூழலில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக, முதலமைச்சரே கூறி இருப்பது பக்தர்கள அதிர்ச்சியடைய செய்துள்ளது.