ஆங்கிலத்தில் பேசினால் அசிங்கம்.. அமித்ஷா சொன்ன கருத்து.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
இந்திய மொழிகளின் பெருமை பேசுவதாக நினைத்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அமித் ஷா குறைத்து மதிப்பிடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நாட்டில், ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளின் பெருமை பேசுவதாக நினைத்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அமித் ஷா குறைத்து மதிப்பிடுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
"ஆங்கிலத்தில் பேசினால் அசிங்கம்"
முன்னாள் அரசு அதிகாரியான அசுதோஷ் அக்னிஹோத்ரி (ஐஏஎஸ்) எழுதிய 'மெயின் பூந்த் ஸ்வயம், குத் சாகர் ஹன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட்டு நிற்பார்கள்.
அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. மன உறுதி உள்ளவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லை என்றால், நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது.
அமித்ஷா சொன்ன கருத்து:
நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.
இந்தப் போர் எவ்வளவு கடினம் என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால், இந்திய சமூகம் அதில் வெற்றி பெறும் என்பதையும் நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது நாட்டை நமது சொந்த மொழிகளில் நடத்துவோம். உலகையும் வழிநடத்துவோம்.
அமிர்த காலத்திற்காக 'பஞ்ச் பிரான்' (ஐந்து உறுதிமொழிகள்) என்ற திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவது, அடிமைத்தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்றுவது, நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வது, ஒற்றுமையாக இருப்பது, ஒவ்வொரு குடிமகனிடமும் கடமை உணர்வைத் தூண்டுவது, இந்த ஐந்து உறுதிமொழிகளும் 130 கோடி மக்களின் உறுதிமொழியாக மாறியுள்ளன. அதனால்தான் 2047 ஆம் ஆண்டுக்குள், நாம் உச்சத்தில் இருப்போம். இந்தப் பயணத்தில் நமது மொழிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
வச்சு செய்யும் நெட்டிசன்கள்:
அதிகாரிகளின் பயிற்சியில் ஒரு தீவிரமான மாற்றம் தேவை. நமது அமைப்பில் பச்சாதாபத்தை அறிமுகப்படுத்த அவர்களுக்கு அரிதாகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருவேளை பிரிட்டிஷ் சகாப்தம் இந்த பயிற்சி மாதிரியை ஊக்கப்படுத்தியதால் இருக்கலாம். எந்தவொரு ஆட்சியாளரோ அல்லது நிர்வாகியோ பச்சாதாபம் இல்லாமல் ஆட்சி செய்தால், அவர்களால் நிர்வாகத்தின் உண்மையான நோக்கத்தை அடைய முடியாது என்று நான் நம்புகிறேன்" என்றார்.
ஆங்கிலத்தில் பேசினால் வெட்கப்பட்டு நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் பேசுவது மட்டும் இல்லாமல், விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளில் கொடி கட்டி பறக்கும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்துவது போல அமித் ஷா பேசியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.





















