"நேரு செய்த தவறுகளே காரணம்" - காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் குற்றம் சுமத்திய மத்திய அமைச்சர் அமித் ஷா
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பல ஆண்டுகளாக காஷ்மீர் அனுபவித்த துன்பங்களுக்கு நேரு செய்த தவறுகளே காரணம்" என்றார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
"நேரு செய்த தவறுகளே காரணம்"
இதை தொடர்ந்து, இன்று விவாதத்தில் பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பல ஆண்டுகளாக காஷ்மீர் அனுபவித்த துன்பங்களுக்கு நேரு செய்த தவறுகளே காரணம்" என்றார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், காஷ்மீரின் பெரிய நிலப்பரப்பு பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டிருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
விவாதத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நேருவியன் தவறு என்ற வார்த்தையை நான் ஆதரிக்கிறேன். நேரு காலத்தில் நடந்த தவறுகளால் காஷ்மீர் பாதிக்கப்பட வேண்டியதாயிற்று. ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் நடந்த இரண்டு பெரிய தவறுகள், அவரது முடிவுகளால்தான் நடந்தது என்பதை கூற விரும்புகிறேன். அதனால்தான் காஷ்மீர் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கொந்தளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா:
நேரு செய்த இரண்டு தவறுகளால்தான் காஷ்மீர் பாதிக்கப்பட்டது. ஒன்று, நமது ராணுவம் வெற்றி பெற்று, பஞ்சாப் பகுதியை அடைந்தவுடன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதி பிறந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்கும்.
காஷ்மீர் முழுவதையும் கைப்பற்றாமல் போர்நிறுத்தம் அறிவித்தது முதல் தவறு. மற்றொன்று, இந்த பிரச்னையை ஐநாவுக்கு கொண்டு சென்றது. நாட்டின் பெரும்பாலான நிலபரப்பு இழக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தவறு" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருந்து வருகிறது. அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1947ஆம் ஆண்டு, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலமாக இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது.