அம்பேத்கர் சாதி அரசியலை கற்றுத்தரவில்லை.. பாஜக சாதி அரசியல் செய்யவில்லை - யோகி ஆதித்யநாத்
”நமக்கு சாதிகள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு தேசியம் மட்டுமே மதம். நாட்டுக்காக உழைப்பவர்கள் எப்போதும் மரியாதைக்கு உரியவர்கள்.””
உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்க இருப்பதை அடுத்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். வாரணாசியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய, மாநில பாஜக அரசுகள் செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் முன்பு இருந்த அரசுகள் பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வெற்றி வாக்குறுதிகளை அளித்ததாக சாடினார். “மற்ற அரசுகளை பாரதிய ஜனதா அரசு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின தலைவர்களின் நினைவிடங்களை நவீனப்படுத்தி இருக்கிறது.” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 10 கோடி மக்களுக்கு கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டு உள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். “தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களில் 95% பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2 கோடியே 61 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டு உள்ளது.” என அவர் கூறினார்.
அதே போல் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.5 கோடி பேருக்கு இந்தியா முழுவதும் வீடுகள் கட்டித்தரப்பட்டு இருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே 42 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக யோகி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சமாஜ்வாடி கட்சியின் மீதான விமர்சனங்களை முன்வைத்தார். “சமாஜ்வாடி ஆட்சி காலத்தில் சோன்பத்ரா, குஷிநகர், சித்ரகூட் மாவட்டங்களில் பஞ்சத்தால் பலர் உயிரிழந்தனர். இலவட ரேசனை சமாஜ்வாடி கட்சியினருக்கு மட்டுமே அளித்துள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் 40 லட்சம் போலி ரேசன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட உத்தரப்பிரதேசத்தில் யாரும் பட்டியால் இறக்கவில்லை. இலவச ரேசன் திட்டம் அவர்களை காப்பாற்றியது.” என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் அடையாள அரசியலை அழித்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். “அம்பேத்கர் சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும், தேசிய மாண்பையும் கலாச்சாரத்தை காக்கவும் போராடியதால் நினைவு கூறப்படுகிறார். நமக்கு சாதிகள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு தேசியம் மட்டுமே மதம். நாட்டுக்காக உழைப்பவர்கள் எப்போதும் மரியாதைக்கு உரியவர்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய யோகி, “பாஜக சாதி அரசியல் செய்வது கிடையாது. பாஜகவின் நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். அம்பேத்கரை நினைவுகூரும் வகையில் பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அம்பேத்கரும் நமக்கு தேச பக்தியைத்தான் சொல்லிக் கொடுத்தார், சாதி அரசியலை அல்ல..” என்று குறிப்பிட்டார்.