Live In Relationship: "சீசனுக்கு ஏற்ப பார்ட்னர்களை மாற்றும் காதலர்கள்" லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து உயர்நீதிமன்றம் பரபர கருத்து
பலருடன் உறவு கொள்வது முற்போக்கு சமூகத்தின் அடையாளமாக காட்டப்படுகிறது என உயர்நீதிமன்றம் பரபர கருத்து தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே, இளைய தலைமுறையினர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் செல்வது அதிகரித்து வருகிறது. காலதர்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு லிவ் இன் ரிலேஷன்ஷிப் பெரிய அளவில் உதவுவதாக ஒரு தரப்பு கூறினாலும், திருமணம் என்ற அமைப்பையே இந்த முறை கேள்விக்குள்ளாக்குவதாக ஒரு சாரர் விமர்சித்து வருகின்றனர்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில், லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி வாயிலாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை ஊக்கப்படுத்துவதன் மூலம் இந்தியாவில் திருமண முறையின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக நீதிபதி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
"பலருடன் உறவு கொள்வது முற்போக்கு சமூகத்தின் அடையாளமாக காட்டப்படுகிறது"
"ஒரு நபருக்கு திருமண முறை வழங்கும் பாதுகாப்பு, சமூக ஏற்பு, முன்னேற்றம், நிலைத்தன்மை ஆகியவற்றை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. அதே சமயத்தில், திருமணமான உறவில் ஒரு துணைக்கு துரோகம் செய்வதும், பலருடன் உறவு வைத்திருப்பதும் முற்போக்கான சமூகத்தின் அடையாளமாக காட்டப்பட்டு, நாட்டில் உள்ள இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
வளர்ந்த நாடுகளில் இருப்பது போல, இந்த நாட்டிலும் திருமண முறை வழக்கற்றுப் போன பிறகுதான் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் சாதாரணமாகக் கருதப்படும். திருமண முறையை பாதுகாப்பது என்பதே வளர்ந்த நாடுகளில் பெரும் பிரச்சனையாகிவிட்டது. எதிர்காலத்தில் நமக்கு பெரும் பிரச்னையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டில் திருமண முறையை அழித்து, சமூகத்தை சீர்குலைத்து, நமது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் திட்டம் உள்ளது. சுமுகமான குடும்ப உறவில் ஈடுபடாத ஒருவர் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியாது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இருக்காது. ஒரு உறவில் இருந்து மற்றொரு உறவுக்கு தாவுவது எதிலும் நிறைவை தராது.
"திருமண முறை வழங்கும் பாதுகாப்பு லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் எதிர்பார்க்க முடியாது"
மிருகங்களை போல ஒவ்வொரு பருவத்திலும் பார்ட்னரை மாற்றுவது நிலையான, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக கருத முடியாது. ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கு திருமண முறை வழங்கும் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் இருந்து எதிர்பார்க்க முடியாது.
நடுத்தர வர்க்க மக்களையும் அவர்களின் ஒழுக்கத்தை சார்ந்துதான் நாட்டின் நிலைத்தன்மையும் சமூகமும் அரசியலும் பொருளாதாரமும் இருக்கிறது. உயர்ந்த வகுப்பினருக்கு ஒழுக்கம் என்பதே இல்லை. வறுமையின் நிர்ப்பந்தம் காரணமாக ஏழை வகுப்பினர் ஒழுக்கத்தை பின்பற்ற முடியாது. நம் நாட்டில் நடுத்தர வர்க்க ஒழுக்கத்தை புறக்கணிக்க முடியாது. நம் நாடு பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டது" என நீதிபதி சித்தார்த் தெரிவித்துள்ளார்.