Gujarat Riots : குஜராத் கலவரங்கள் வழக்கு...குற்றமற்றவராக அறிவிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர்...சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!
அகமதாபாத்தின் நரோடா காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உயிருடன் வைத்து கொல்லப்பட்டனர். அவர்களின் வீடு எரித்து நாசமாக்கப்பட்டன.
கடந்த 2022ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தேடி தேடி கொலை செய்யப்பட்டனர். இஸ்லாமிய பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
நரோடா காம் கலவரம்:
குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த கலவரங்கள் அரங்கேறியது. அப்படிப்பட்ட கொடூர சம்பவம்தான் நரோடா காமில் நடந்தது. அகமதாபாத்தின் நரோடா காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உயிருடன் வைத்து கொல்லப்பட்டனர். அவர்களின் வீடு எரித்து நாசமாக்கப்பட்டன.
இங்கு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக குஜராத்தின் முன்னாள் அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மாயா கோட்னானி, பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த பாபு பஞ்ரங்கி உள்பட 60 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக, இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இச்சூழலில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், மாயா கோட்னானி உள்ளிட்ட 60 பேரையும் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சம்ஷாத் பதான் தெரிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு:
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. தனது பணியைச் சரியாக செய்து 86 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரானது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது. 20 ஆண்டுகள் கடந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.
சிறப்பு நீதிமன்றம் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது என்று தெரியவில்லை. உத்தரவு நகலுக்கு காத்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. FSL (வெளிநாட்டு அறிவியல் ஆய்வகம்) அறிக்கைகள், செல்கோபுரத்தின் இருப்பிடம் வரை நேரில் கண்ட சாட்சிகள் வரை அனைத்து ஆதாரமும் உள்ளது.
2017ஆம் ஆண்டு, கோட்னானிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நீதிமன்றத்தில் சாட்சியமாக ஆஜரானார். 2002ஆம் ஆண்டு, சபர்மதி ரயில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் கோட்னானி.
இந்த வழக்கில் மட்டும் இன்றி, நரோடா பாட்டியா கலவர வழக்கிலும் கோட்னானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டபோதிலும், அவரை குஜராத் உயர் நீதிமன்றம் குற்றமற்றவராக அறிவித்து விடுதலை செய்தது.
நரோடா காமில் நடந்த படுகொலை, 2002 ஆம் ஆண்டு நடந்த ஒன்பது பெரிய வகுப்புவாத கலவர வழக்குகளில் ஒன்று. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.