Airlines: நடுவானில் பறந்த விமானம்...! காக்பிட்டிற்கு தோழியை அழைத்துச் சென்ற விமானி..! அடுத்து நடந்தது என்ன?
துபாய்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் விமானி ஒருவர் தனது தோழியை அவருக்கு அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Airlines : துபாய்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் விமானி ஒருவர் தனது தோழியை அவருக்கு அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விமானம் ஓட்டுபவர்கள் இருக்கும் இடத்தை காக்பிட் என்று சொல்வார்கள். அங்கு விமான குழு தவிர பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அது உள்ளது. காக்பிட் பகுதி என்பது விமானிகளுக்கானது. இங்கிருந்து விமானிகள் விமானங்களை இயக்கி வருகின்றனர். இதனால் பயணிகள் யாருக்கும் அங்கு செல்ல அனுமதி கிடையாது.
தோழியுடன் விமானி
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் (AI915Df) வந்துள்ளது. அந்த விமானத்தை இயக்கிய விமானி ஒருவர், அதே விமானத்தில் பயணித்த தனது தோழியை, விமான அறைக்கு வரவழைத்து அவருக்கு அருகே அமரவைத்துக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளார். அதாவது, தோழியை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்று செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், தனது தோழிக்கு மதுபானம் வழங்குமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
A pilot of an Air India flight, operating from Dubai to Delhi, allowed a female friend in the cockpit, on February 27, violating DGCA safety norms. Probe being conducted: DGCA
— ANI (@ANI) April 21, 2023
ஆனால், அவ்வாறு வழங்க முடியாது என பணிப்பெண் கூறியதால், விமானி அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பணிப்பெண் புகார் அளித்துள்ளார். காக்பிட் பகுதியில் பயணிகள் அனுமதிப்பது என்பது பாதுகாப்பு தொடர்பான விதிமீறலாகும்.
விசாரணைக்கு உத்தரவு
ஆனால் விமானி ஒருவர் தனது தோழியை அங்கு அனுமதித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் டிஜிசிஏ எனும் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "விமான பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களில் நாங்கள் எந்த சமரசத்தையும் கொண்டிருப்பது இல்லை. இந்த சம்பவத்தில் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த சம்பவம் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதற்கிடையில், காக்பிட் பகுதியில் விமானி ஒருவர் தனது தோழியை சுமார் ஒரு மணி நேரம் அமர வைத்த புகாரில் சம்பந்தப்பட்ட விமானி இன்று நேரில் ஆஜராக விமான போக்குவரத்து இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க