Governor Late: யாரா இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான்.. லேட்டாக வந்த ஆளுநர்.. விட்டுட்டு சென்ற விமானம்.. நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களில் நிர்வாக தலைவராக முதலமைச்சர் இருந்தாலும், அரசியலமைப்பின்படி தலைவராக இருப்பவர் ஆளுநர்தான். மத்தியில் குடியரசு தலைவரை போல மாநிலத்தில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இவருக்கு என சில பிரத்யேக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு தாமதமாக வந்தாரா ஆளுநர்?
இந்த நிலையில், விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த காரணத்தால் ஆளுநரை விட்டுவிட்டு, விமானம் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தின் ஓய்வறையில் ஆளுநர் காத்திருந்தபோதிலும், அவரை விட்டுவிட்டு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. ஆளுவரை விட்டுவிட்டு விமானத்தை இயக்கியது விதிகளை மீறிய செயல் என விமான நிலையத்தின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், "ஆளுநர் கெலாட் வியாழக்கிழமை பிற்பகல் ஹைதராபாத்தில் இருந்து இரண்டாவது முனையம் வழியாக விமானம் மூலம் ராய்ச்சூருக்குச் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருந்தார். பெங்களூர் விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் வந்தவுடன், கெலாட்டின் பொருள்கள் அதில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கெலாட் முனையத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விஐபி ஓய்வறையில் இருந்து விமானத்தை பிடிக்க வருவதற்குள், விமானம் ஹைதராபாத் புறப்பட்டு விட்டது. 90 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்து, வேறு விமானத்தை பிடித்து ஆளுநர் ஹைதராபாத் சென்றுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக ஆளுநர் மாளிகை அதிகாரிகள், எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல, ஏர் ஏசியா விமான நிறுவனம் சார்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
விதிகள் மீறப்பட்டுள்ளதா?
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் போன்ற வி.வி.ஐ.பி.க்கள், காத்திருப்பதற்கு என பிரத்யேக ஓய்வறை உள்ளது. இங்கு பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோல, ஆளுநர் போன்ற வி.வி.ஐ.பி.க்களை சோதனை உட்படுத்தக்கூடாது என்பது பின்பட்டப்பட்டு வரும் நெறிமுறை.
பிரத்யேக ஓய்வறையிலிருந்து விமானம் புறப்படுவதற்குத் தயாராக உள்ள டார்மாக்கிற்கு, பிரேத்யேக வாகனம் மூலம் ஆளுநர் நேரடியாக அழைத்துச் செல்லப்படுவார். பொது மக்கள் செல்லும் போர்டிங் கேட் வழியாக அவர் செல்ல வேண்டியதில்லை. மேலும், அனைத்து பயணிகளும் ஏறிய பிறகே, ஆளுநரின் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அதன், பின்னரே கடைசி ஆளாக ஆளுநர் விமானத்தில் ஏறுவார். எனவே, கடைசியாக ஏறியிருக்க வேண்டியர் ஆளுநர். இப்படி இருக்கையில், அவர் தாமதமாக வந்ததாக கூறப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விதிகளை மீறி ஆளுநரை ஏற்றாமல் விமானத்தை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.