காயத்ரி மந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு குணமளிக்குமா! ஆய்வுசெய்ய ரிஷிகேஷ் எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கியது மத்திய அரசு..
காயத்ரி மந்திரம் எவ்வாறு கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வை எய்ம்ஸ் ரிஷிகேஷ் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது அலையின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் திணறி வருகின்றனர். அத்துடன் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா மூச்சு பயிற்சி எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்விற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு ரிஷிகேஷ் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 கொரோனா நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு வெறும் மருத்துவ சிகிச்சையும், மீதமுள்ள 10 பேருக்கு மருத்துவ சிகிச்சையுடன் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 10 நோயாளிகளும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் ஒரு மணி நேரம் காயத்ரி மந்திரம் சொல்லியும் பிராணயாமா செய்தும் வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு பயன் அளித்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்று நோய் மருத்துவர் மற்றும் இயக்குநர் ரன்தீப் குலேரியா, "மூச்சு பயிற்சிகள் தொற்று அல்லாத நோய்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும். ஆனால் கொரோனா தொற்று போன்ற வைரஸ் நோய்களுக்கு இந்த பயிற்சி பெரியளவில் பலனை அளிக்க வாய்ப்பு குறைவு தான்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பல்வேறு மருத்துவர்களும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அதை சரி செய்யாமல் இந்த மாதிரியான ஆய்விற்கு நிதி அளித்து வருவது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சமயத்தில் இதுபோன்ற அறிவியல் சாராத ஆய்வுகளுக்கு மத்திய அரசு ஏன் இந்த நேரத்தில் ஆய்வு செய்து வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு 'பிராண வாயு' என்ற வென்டிலேட்டர்களை தயாரித்து எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருத்துவமனை அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்த மாதிரியான ஆய்வுகளை செய்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.