Adani Shares : தொடர்ந்து 7-வது நாளாக பங்குகள் சரிவு.. பணக்காரர்கள் பட்டியலில் 21-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி
தொடர்ந்து 7-வது நாளாக அதானி நிறுவனம் சரிவை கண்டு வருகிறது. இதுவரை 108 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
தொடர்ந்து 7வது நாளாக அதானி நிறுவனம் சரிவை கண்டு வருகிறது. இதுவரை 108 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 17 ஜனவரி 2023 அன்று உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்தார். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 3), முதல் 20 பேர்களில் ஒருவராக கூட இடம்பெறவில்லை. அதானியின் நிகர மதிப்பு ஜனவரி 17 அன்று 124 பில்லியன் டாலரிலிருந்து தற்போது 61.3 பில்லியன் டாலராகக் கடுமையாகக் சரிந்துள்ளது. இதற்கு ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையே காரணம் எனக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு இதுவரை 108 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவனம் பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு வழக்கில் மோசடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கௌதம் அதானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் 21-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்தியா மற்றும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான கௌதம் அதானி தற்போது இந்தியாவின் 2வது மற்றும் ஆசியாவின் 3வது பணக்காரராக தள்ளப்பட்டுள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி நிறுவனத்தின் பழைய கணக்கு வழக்கு மற்றும் பங்கு சந்தை சார்ந்த சந்தேகங்களை மீண்டும் ஆய்வு செய்து மோசடி செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதற்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ப்ளூம்பெர்க் பட்டியலின் படி மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்த அவர் இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையில், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று அதானி பங்குகளை இன்று முதல் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை (ASM) கட்டமைப்பின் கீழ் வைத்துள்ளது. இந்திய சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, அதிக ஏற்ற இறக்கமான பங்குகளை கண்காணிக்க பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச்சேர்ந்த ஹிண்டன்பெர்க் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பங்குச் சந்தை மோசடி தொடர்பான சில தரவுகளால், அதானி உள்ளிட்ட பலநிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அண்மைக்கால வரலாறு காணாத அளவில், பல பங்குகளில் சரிவுகள் இருந்தன.
இதற்கிடையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். மேலும், கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் ஒரு குழு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், “எல்.ஐ.சி, எஸ்பிஐ மற்று பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதால் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழக்கின்றனர். கோடிக்கணக்கான இந்தியர்கள் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க விதி 267 இன் கீழ் வணிக அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், அதானி எண்டர்பிரைசஸ் புதன்கிழமை அதன் ரூ.20,000 கோடி ஃபாலோ-அப் பொதுப் பங்களிப்பை (FPO) திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது. அமெரிக்க ஷார்ட்செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி எண்டர்பிரைசஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தரப்பில் அதானி பற்றி கேளிவி எழுப்பப்பட்ட நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.