Rajinikanth Meets Uddhav Thackeray: உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினிகாந்த்..!
பால் தாக்கரே ஆதரவளரான நடிகர் ரஜினிகாந்த் உத்தவ் தாக்கரே குடும்பத்தினரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள முதலமைச்சரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் குடும்பத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் முழுவீச்சில் கலந்துகொண்டு வரும் நிலையில், முன்னதாக படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தார்.
உத்தவ் தாக்கரே இல்லத்தில் ரஜினி
இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் மும்பை, பாந்திராவில் முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சிவசேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரேவிற்கு மிகவும் நெருக்கமான நடிகர் ரஜினிகாந்த் உத்தவ் தாக்கரே குடும்பத்தினரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக அக்கட்சி தரப்பினர் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆதித்யா தாக்கரே பதிவு
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தங்கள் இல்லத்தில் வரவேற்கும் புகைப்படத்தை சட்டப்பேரவை உறுப்பினரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிகாந்தை தங்கள் இல்லத்தில் வரவேற்றது மகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நேற்று முன் தினம் (மார்ச்.17) மும்பை வான்கடே மைதானத்தில் கண்டு ரசித்த நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
வான்கடே மைதானத்தில் ரஜினி
மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பின் பேரில் ரஜினிகாந்த் இந்தப் போட்டியைக் காண சென்ற நிலையில், இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் குல்தீப் யாதவ், வாஷிங்டன் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததுடன் ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர் என கேப்ஷன் பகிர்ந்தார். இந்நிலையில் குல்தீப் யாதவ்வின் இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வைரலானது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துடன் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
கிரிக்கெட் சார்ந்த த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படம் நிமித்தமாக ரஜினி கிரிக்கெட் வீரர்களை சந்தித்துப் பேசினாரா? என்றும் ரசிகர்கள் முன்னதாக இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
மற்றொருபுறம் ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துவிட்ட நிலையில், வரும் மே மாதம் கோடை ஸ்பெஷலாகவோ அல்லது தீபாவளிக்கோ இந்தப் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: RRR Oscars: ஆஸ்கர் விழாவுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ராஜமெளலி.. கடைசி வரிசையில் அமர்ந்து பார்த்த ஆர்.ஆர்.ஆர். டீம்..!