
மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து
கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து மக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர் என நடிகர் கிஷோர் விமர்சித்துள்ளார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம், ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என்றும் அங்கு கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கூறியது என்ன?
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கட்டப்பட்டு வரும் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில், இந்து மத குருமார்களை தவிர்த்து நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
மசூதியை இடித்து அங்கு கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் சென்றனர். ராமர் கோயில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி வருகின்றனர்.
அந்த வகையில், ராமர் கோயில் திறப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் கிஷோர், "கோயில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.
"பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது"
கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோயிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. அவர்களின் மக்களும் ஜோக்கர்களும் புகழ்பாடி வருகின்றனர். மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், சமூக சீர்திருத்தவாதி பசவரின் வாசகத்தை மேற்கோள் காட்டிய நடிகர் கிஷோர், "செல்வம் உள்ளவர்கள் கோவில் கட்டுகிறார்கள். ஏழையான நான் என்ன கட்ட முடியும். என்னுடைய கால்களே தூண்கள். எனது உடலே கருவறை. எனது தலையே கோயிலின் ஒளிரும் குவிமாடம். எனது கடவுளான கூடலசங்கமக்கு நன்றாக தெரியும். நிலையானது அழியும். மாற்றம் என்பதே தொடர்ந்து நிலைநிற்கும்" என பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

