தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்
ஐதராபாத்தில் இன்று தொடங்கியது ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் மாநாடு 2024இல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் மாநாடு 2024, ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் அரசியல், கலை, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit:
தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது
இதன் இரண்டாவது பதிப்பு, "தென்னிந்தியாவின் வளர்ச்சியில் முதிர்ச்சி: அடையாளம், உத்வேகம் மற்றும் தாக்கம்" என்ற கருப்பொருளில், தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள பார்க் ஹயாத் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை, தெலங்கான முதலமைச்சர் ரேவந்தெ ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் சேர்ந்து ஏபிபி நெட்வர்க்கின் இயக்குனர் த்ருபா முகெர்ஜி மற்றும் ஏபிபி நாடுவின் செய்தி ஆசிரியர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோரும் குத்துவிளக்கேற்றினார். பின்பு, த்ருபா முகெர்ஜியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியின் விவாத அமர்வுகள் தொடங்கியது.
தென்னகத்தை கொண்டாடும் பிரபலங்கள்:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் பேச உள்ளனர். முன்னாள் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பத்ம பூஷன் புல்லேலா கோபிசந்த், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொடுவால், நடிகை கவுதமி, நடிகர் சாய் துர்கா தேஜ், நடிகை ராஷி கண்ணா போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் தென்னிந்தியாவின் துடிப்பான அடையாளம் குறித்த தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஐதராபாத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மாதவி லதா, காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநகரி ஆகியோர் பெண்கள் மட்டுமே உரையாடும் கலந்துரையாடலில் கூட்டாட்சியை வலுப்படுத்துவது என்ற தலைப்பில் பேச உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் நேரலையை காலை 10.00 மணி முதல் ஏபிபி நாடு உள்பட ஏபிபி நெட்வர்க்கின் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
சுகாதாரம், கல்வி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் பிராந்திய அடையாளத்தின் பரிணாம வளர்ச்சி போன்ற முக்கியமான பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள் இந்த மாநாட்டில் நடக்கப்போகிறது.