ABP Southern Rising Summit 2024: "தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெறும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டினை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ABP Southern Rising Summit 2024: நாட்டின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்களை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பட்டியலிட்டு பேசினார்.
ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு:
தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதனை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உச்சி மாநாட்டின் இரண்டாவது எடிஷன் ஆனது, "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாடுகிறது.
பிரதமர் மோடியை தாக்கி பேசிய ரேவந்த் ரெட்டி
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “வடக்கிற்கு தெற்கிற்கு எவ்வளவோ செய்கிறது. ஆனால், வடக்கு தெற்கிற்கு எதையும் செய்ய மறுக்கிறது. தெற்கில் உள்ள மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய பாஜக அரசு குறைக்க நினைக்கிறது. வட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் வரித் தொகையை அதிகம் வாரி வழங்குகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு தென்னிந்தியாவிற்கு தேவையானவற்றை எதையும் தருவதில்லை.
ஏனென்றால், இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் அதனால்தான். உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் மற்ற தென் மாநிலங்களை விட அதிக வருமானம் பெறுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுகிறார். ஆனால் இங்குள்ள வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.” என ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடிக்கு கேள்வி:
தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான அரசு மற்றும் பிரதமர்கள், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை முன்னேற்றுவதற்காக கொண்டு வந்த திட்டங்களை ரேவந்த் ரெட்டி பட்டியலிட்டார். அதேநேரம், ”தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்திற்காக கொண்டு வந்த மாற்றங்கள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
”அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு”
தொடர்ந்து, “சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை கட்டியபோது நாங்கள் ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால், தெலங்கானாவில் மகாத்மா காந்திக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற எங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறீர்கள். மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால், மத்திய அரசு எங்களை வஞ்சிக்கிறது. தென்மாநிலங்களை தொடர்ந்து வஞ்சித்து வந்தால், 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற உங்களது கனவு எப்படி சாத்தியமாகும்? வளர்ச்சிக்கான அரசியலை கைவிடுத்து, அழிவிற்கான அரசியலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது” என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆவேசமாக பேசினார்.