எதிர்க்கட்சிகளையும் கொஞ்ச லவ் பண்ணுங்க...ராகுல் காந்திக்கு தூதுவிடும் ஆம் ஆத்மி..!
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே நடந்த காரசார விவாதம் பேசுபொருளாக மாறியது.
கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை, பிகார் மாநிலம் பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வியூகம் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.
டெல்லி அவசர சட்ட விவகாரம்:
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே நடந்த காரசார விவாதம் பேசுபொருளாக மாறியது. டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி வந்தது.
ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.
இந்த விவகாரத்தில், பாஜகவுடன் காங்கிரஸ் டீலிங் வைத்திருப்பதாகவும் அதனால்தான் காங்கிரஸ் முடிவு எடுக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது. மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்திருப்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
"எதிர்க்கட்சிகளையும் கொஞ்ச லவ் பண்ணுங்க"
இந்நிலையில், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. வெறுப்புமிக்க சந்தையில் அன்பால் ஆன கடை திறப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருமான சௌரப் பரத்வாஜ், "ராகுல் காந்தி அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
வெறுப்பு மிக்க சந்தை இருக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆனால், நீங்களும் அன்பை தர வேண்டும். எதிர்கட்சிகள் உங்களிடம் அன்பு கேட்டு வரும்போது, நீங்கள் இல்லை என்று சொன்னால் அது உங்களின் வார்த்தைகளின் மீது கேள்விகளை எழுப்புகிறது. அகங்காரமாக இருப்பது சரிதான். ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அமையும் புதிய அரசாங்கமும் அதிக ஈகோவுடன் இருப்பதற்கும் ஒரு எல்லை உள்ளது" என்றார்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், "பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக போட்டியிடுகின்றன. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மோதிக் கொள்கின்றன. கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரஸும் போட்டியாளர்கள். இத்தனை முரண்பாடுகள் இருந்தபோதிலும், நாம் இப்போது ஒன்றுபட வேண்டும்" என்றார்.