''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் முறைகேடு என்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் பவன் பாண்டே ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நீண்ட நாட்களாக ராமர் கோவில் விவகாரம் 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவிற்கு வந்தது. அந்தத் தீர்ப்பின்படி அயோத்தில் ராமர் கோவில் கட்ட நிலம் கையகப்படுத்தி பணிகளை மேற்கொள்ள ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை என்று ஒன்று நிறுவப்பட்டது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "ராம் ஜென்ம பூமி அறக்கட்டளையின் பொது செயலாளர் சம்பத் ராய் மற்றொரு உறுப்பினர் அனில் மிஸ்ராவின் உதவியுடன் கடந்த மார்ச் 18ஆம் தேதி 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். மேலும் அயோத்தியில் இருக்கும் அந்த இடத்தை அதே நாளில் மாலை 5.11 மணிக்கு ஒருவர் 2 கோடிக்கு ரூபாய்க்கு சுல்தான் அன்சாரி என்பவர் வாங்கியுள்ளார். அவருடமிருந்து 5.22 மணிக்கு ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அந்த நிலம் 18.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை கொண்டு வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டும். இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ராமர் பெயரை கூறி இது மாதிரி முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டை அளிக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
இதே குற்றச்சாட்டை சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ பவன் பாண்டே,"2 கோடி ரூபாய்கு வாங்கப்பட்ட நிலம் எப்படி 10 நிமிடங்களில் 18.5 கோடி ரூபாயாக உயர்ந்தது. இப்படி உடனடியாக அதிகரிக்க அதில் என்ன தங்கமாக இருந்தது. இந்த நிலம் வாங்கும் போது அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்தியா ஆகியோரும் உடன் இருந்தனர்" எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, "பல கோடி மக்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்து பணத்தை ராமருக்கு கோவில் கட்ட அளித்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்து முறைகேடு செய்வதா. இது அவர்களின் நம்பிக்கைக்கு செய்யப்படும் மிகப் பெரும் துரோகம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேடு புகார் தொடர்பாக ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பு பலரும் அயோத்தில் நிலம் வாங்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு நிலத்தில் விலை சற்று அதிகரித்துள்ளது. எனினும் நாங்கள் ராமர் கோவில் கட்ட வாங்கிய நிலங்கள் அனைத்தின் விலையும் சந்தை விலையைவிட மிகவும் குறைவு தான். மேலும் இந்த நிலம் வாங்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் தான் செய்யப்படுகிறது. அத்துடன் பணம் அளிப்பதும் வங்கிகள் மூலமாகவே நடைபெறுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?