Modi Mango: விற்பனைக்கு வருது ‘மோடி மாம்பழம்’..! பிரதமர் பெயரில் மாம்பழம் உருவானது எப்படி?
Modi Mango: மாம்பழ காதலர் மோடியின் பெயரில் புதிதாக ஒரு மாம்பழ வகை விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழம் என்றால் அவ்வளவு பிரியம். இதை அவரே பல தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மாம்பழ காதலர் மோடியின் பெயரில் புதிதாக ஒரு மாம்பழ வகை விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.
கோடை என்றதும் நம் நினைவுக்கு வருவது விடுமுறையோடு, மாம்பழ சீசன். கோடையில் சுவை மிகுந்த பல வகையான மாம்பழங்கள் சாப்பிடலாம். அப்படி ஒருவர் மாம்பழத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார்.
’மோடி மாம்பழம்’ பிறந்த கதை;
உத்திரப்பிரதேசம் அருகே உள்ள மலிஹாபாத் பகுதியைச் சேர்ந்தவர் உபேந்திர சிங். மாம்பழ ஆராய்சிசியாளர். இவர் மாம்பழங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்படி ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது, மாம்பழ வகையில் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைப்படுத்தும் வகையில் இருந்திருக்கிறது. இதனால், உபேந்திர சிங், அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். உபேந்திர சிங் தனது ஆசைக்கு செயல் வடிவமும் அளித்துள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் மோடியின் பெயரில் இந்த ரக மாம்பழத்திற்கு பதிவு செய்து ஒப்படைத்துள்ளார். இந்த மாம்பழம் மற்ற மாம்பழங்களைப் போல் அல்லாமல் சுவை மிக வித்தியாசமாக இருந்துள்ளது. அதனால்,இதற்கு மோடி மாம்பழம் என்ற பெயரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வகை மாம்பழ ரகத்திற்கு வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சான்றிதழ் வங்கியுள்ளது.
விரைவில் விற்பனை:
இந்த வகை மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. லக்னோவின் மலிஹாபாத் பகுதியில் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே இந்த ‘மோடி மாம்பழம்’ சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
லக்னோ பகுதியில் கிடைக்கும் இரண்டு வகையான மாம்பழ வகைகளை இணைத்து இந்த ‘மோடி மாம்பழத்தை’ உருவாக்கியுள்ளார் சிங். இதன் எடை சராசரியாக 450 கிராம் எடை இருக்குமென சொல்லப்படுகிறது. இந்த மோடி மாம்பழம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
இந்த ரக மாம்பழம் கடந்த 2019- ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ’பழங்களின் அரசன்’ என்ற கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சந்தை விற்பனை குறித்த அறிவிப்பு அப்போது வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அடுத்தாண்டு ‘மோடி மாம்பழம்’ சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அதிகளவில் இருக்கும் என்று உபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்த மோடி மாம்பழங்களின் 1000 மரக்கன்றுகள் தற்போது விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும் உபேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஒரு மரக்கன்றின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க..
Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!