(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Praises YouTuber | தினக்கூலி முதல் யூ ட்யூப் வரை : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டிய ஒடிசா யூட்யூபர்..!
அரிசி பருப்பு சோறு, கீரைக் கூட்டு, பச்சைத் தக்காளி, பச்சை மிளகாய் என்று ஈயத் தட்டில் அவர் அடுக்கிவைத்து சாப்பிட்ட அந்த எளிமையான வீடியோ இன்றும் பிரபலம்.
மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூட்யூபர் ஐசக் முண்டாவைப் பாராட்டியுள்ளார். பிரதமராக மோடி பதிவேற்றது தொடங்கி மாதம் தோறும் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக் கிழமையும் அவர் உரையாற்றினார். அப்போது அவர், நாடு முழுவதும் தங்களின் தனித்துவ செயல்களால் கவன ஈர்த்த சிலரைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசி மக்களை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐசக் முண்டா பற்றியும் பேசினார்.
யார் இந்த ஐசக் முண்டா?
ஒடிஷா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐசக் முண்டா. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு வேளை உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வந்த ஐசக் முண்டா, தனது சோகமான நாட்களை கழிக்க யூட்யூபில் வீடியோ பார்க்க தொடங்கியுள்ளார். அப்படி ஒருநாள் வீடியோ பார்க்கும்போது, யூட்யூப் வீடியோ மூலம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து ஒரு வீடியோவைப் பார்த்துள்ளார். அதனைப் பார்த்ததுமே அவருக்கும் யூட்யூப் வீடியோ எடுக்கும் ஆசை வந்துள்ளது. ’ஃபுட் ப்ளாகர்கள்’ வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்ட ஐசக், அவரும் தனக்கென ஒரு யூட்யூப் சேனலை தொடங்கி அதில் உணவு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
முதன்முதலில் தன் கனவை நினைவாக்க அவருக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோன் தேவைப்பட்டது. அதற்காக அவர் ரூ..3000 கடன் வாங்கியே ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கியுள்ளார். அதில் பதிவு செய்த முதல் வீடியோ பருப்பு சோறு சாப்பிடுவது. தனது சேனல் ஐசக் முண்டா ஈட்டிங் (Isac Munda Eating) என்று பெயர் வைத்தார்.
முதல் வீடியோவே லட்சக்கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது. அரிசி பருப்பு சோறு, கீரைக் கூட்டு, பச்சைத் தக்காளி, பச்சை மிளகாய் என்று ஈயத் தட்டில் அவர் அடுக்கிவைத்து சாப்பிட்ட அந்த எளிமையான வீடியோ இன்றும் பிரபலம். தொடர்ந்து அவர் தனது ஊரின் பாரம்பரிய உணவுகள், யதார்த்தமான வாழ்க்கை முறை, ஊரில் நிலவும் கஷ்ட நஷ்டங்கள் என இயல்பானவற்றை படம் பிடித்து யூட்யூபில் பதிவேற்றி வருகிறார். அவரது அத்தனை வீடியோக்களும் ஹிட் அடிக்க இப்போது அவர் லட்சாதிபதியாகி விட்டார். யூட்யூபில் கிடைத்த வருமானம் மூலம் ரூ.5 லட்சத்துக்கு அவர் ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் அவர் தனது மனைவி, இரு மகள்கள் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
மோடி பாராட்டு..
79-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்தும் உள்ளூர் தொழில் முனைவோரை ஆதரிப்பது குறித்தும் பேசினார். அப்போது அவர், "ஒடிசாவில் தினக்கூலியாக இருந்த ஐசக் முண்டா என்ற இளைஞர் இன்று தனது யூட்யூப் சேனல் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். முண்டா தனது கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறார். உள்ளூர் உணவு வகைகளைப் பிரபலப்படுத்துகிறார். தொழில்நுட்பத்தின் வரங்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறியுள்ள முண்டா நமக்கு உத்வேகத்தை அளிக்கிறார்" என்று பிரதமர் பாராட்டியுள்ளார். பிரதமரின் பாராட்டைப் பெற்ற முண்டா, "மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி என்னைப் பாராட்டியுள்ளார். இது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. நான் எனது பணியை நல்ல முறையில் தொடர்வேன்" என்று கூறியுள்ளார்.