Crime: ஜெய் ஸ்ரீராம் என எழுதிய 10ம் வகுப்பு மாணவன்.. கடுமையாக தாக்கிய ஆசிரியர்கள்.. ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி..!
வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில், ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவனை அடித்த இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவனை அடித்த இரண்டு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10ம் வகுப்பு மாணவனுக்கு அடி:
நீரஜ் என்ற மாணவர், தனது வகுப்பில் மதம் சார்பான வாசகத்தை எழுதியதை கண்டுபிடித்ததன் காரணமாக உருது விரிவுரையாளர் டாக்டர் ஃபரூக் மற்றும் முதல்வர் முகமத் ஹபீஸ் ஆகிய இரு ஆசிரியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது.
டாக்டர் ஃபாரூக், நீரஜை வகுப்பறைக்கு வெளியே இழுத்துச் சென்று அடித்ததாகவும், அதே நேரத்தில் தலைமையாசிரியரும் சேர்ந்து மாணவனை அடித்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். பானியின் பிரதான சந்தையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி சந்தையை மூடுமாறு வற்புறுத்தினர். பின்னர் பூட்டியிருந்த பள்ளிக்கு ஊர்வலமாகச் சென்று பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
விசாரணைக்குழு:
அவர்கள் 2 ஆசிரியர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பானியின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) சதீஷ் சர்மா, சம்பவத்தை உறுதிப்படுத்தினார், மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த குழு இரண்டு நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பித்து, அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி முதல்வர் தலைமறைவு:
கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை நடைப்பெற்ற நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்குப் பிறகு, சில மாணவர்கள் பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷமிட்டதாக கூறப்பட்ட சில நாட்களுக்கு பின் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளம்னர். போலீஸ் தரப்பில் கூறுகையில், பள்ளி முதல்வர் தலைமறைவாகியுள்ளார் எனவும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் முதல்வர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 342 (தவறான சிறைவைப்பு), 504 (வேண்டுமென்றே அவமதிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் சிறார் நீதியின் பிரிவு 75 (குழந்தைகளுக்கு செய்யும் கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.