Udhayanidhi Case: அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. விடாது துரத்தும் சனாதன வழக்கு!
பிகார் மாநிலம் அர்ராவில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது.
தொடரும் சனாதன சர்ச்சை:
இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், பிகார் மாநிலம் அர்ராவில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 298இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதனம் தொடர்பாக முன்னதாக விளக்கம் அளித்த உதயநிதி, "சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார் சொன்னதைத் தான் நானும் சொன்னேன். அமித் ஷா முதல் நட்டா வரை நான் பேசியதை திரித்து பொய் செய்தியாக பரப்புகிறார்கள். சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்" என்றார்.
கர்நாடக நீதிமன்றம் அதிரடி:
மேலும், "நான் பேசியதில் தவறேதும் இல்லை. வழக்கை சட்டப்படி சந்திப்போம். எனது நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன். நான் என் சித்தாந்தத்தைப் பற்றி மட்டுமே பேசினேன்" என்றும் கூறியிருந்தார்.
இதற்கு, உதயநிதியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பாஜக காட்டமான விமர்சனத்தை முன்வைத்தது. "ஹிட்லர் யூதர்களை எப்படிக் குறிப்பிட்டார் என்பதற்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை விவரித்ததற்கும் இடையே ஒரு வினோதமான ஒற்றுமை உள்ளது.
ஹிட்லரைப் போலவே உதயநிதி ஸ்டாலினும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். நாஜி வெறுப்பு எப்படி ஹோலோகாஸ்டுக்கு (இனப்படுகொலைக்கு) இட்டு சென்று, சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களையும், குறைந்தது 5 மில்லியன் சோவியத் போர்க் கைதிகளையும் பிற பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றது என்பதை நாங்கள் அறிவோம்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்து அப்பட்டமான வெறுப்பு பேச்சு. சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்" என பாஜக தரப்பு கடுமையாக சாடியது.
இதையும் படிக்க: Electoral Bonds case: தேர்தல் பத்திர வழக்கு: அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!