Sabarimala: சபரிமலையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி!
தொடர்ச்சியாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தொடங்கி 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் நிலைமை மோசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். பிற மாதங்களில் தமிழ் மாதத்தின் முதல் நாள் தொடங்கி 5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும். இப்படியான நிலையில் மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்
அன்று தொடங்கி தொடர்ச்சியாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தொடங்கி 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் பக்தர்களின் தலைகளாக இருப்பதால் ஒதுங்க கூட இடமின்றி கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தயவு செய்து குழந்தைகள், முதியவர்களை சபரிமலைக்கு அழைத்து வர வேண்டாம் என அங்கு தரிசனம் செய்த பக்தர்கள் வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மாரடைப்பால் பெண் பலி
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்ய வந்த கோழிக்கோடி மாவட்டம் கொய்லாண்டியைச் சேர்ந்த சதி என்ற 60 வயது பெண்மணி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறிய நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்பாச்சி மேடு பகுதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கூட்டம் அதிகரிப்பதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். பம்பை நதியில் இருந்து கன்னிமூல கணபதி கோயில் வரை உள்ள மேம்பால பகுதியில் பக்தர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பக்தர்கள் முன்னோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனிடையே பல இடங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலை சன்னிதானம் நோக்கி செல்வதால் பெருங்குழப்பம் நிலவுவதாக சபரிமலை காவல்துறை தலைவர் எஸ். ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். எனவே அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மோசமான முன்னேற்பாடு பணிகள்
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் முறை மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு செய்த மோசமான முன்னேற்பாடு பணிகள் தான் இப்படி சபரிமலையில் பக்தர்கள் சிரமங்களை சந்திக்க காரணம் என்ற குற்றச்சாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















