உள்ளே புகுந்த DragonForce! திடீரென முடக்கப்பட்ட 70 வெப்சைட்கள்.. பதறிப்போன அதிகாரிகள்.!
DragonForce Malaysia என்ற பெயரின் கீழ் இந்தியாவின் தனியார் மற்றும் அரசு வெப்சைட்டுகள் பல ஹேக் செய்யப்பட்டன.
வெப்சைட் ஹேக்..
நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சை கருத்து தெரிவித்த நிலையில், இதை காரணம் காட்டி இந்தியாவில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் DragonForce Malaysia என்ற பெயரின் கீழ் இந்தியாவின் தனியார் மற்றும் அரசு வெப்சைட்டுகள் பல ஹேக் செய்யப்பட்டன.
இஸ்ரேலில் உள்ள இந்தியாவின் தூதரகம்,இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட பல வெப்சைட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 70க்கும் மேற்பட்ட வெப்சைட்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அரசு மட்டுமின்றி, தனியார் வெப்சைட்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல தனியார் வெப்சைட்கள் இதில் அடங்கும். மகாராஷ்டிராவில் மட்டும் 50 வெப்சைட்கள் பிரச்னையில் சிக்கியுள்ளன.
ஹேக் செய்யப்பட்ட வெப்சைட்களில் ஆடியோ மற்றும் டெக்ஸ் வழியாக ஒரு பொதுவான தகவலையும் ஹேக்கர்ஸ் குழு வெளியிட்டுள்ளது.
அதில், '' நீங்கள் உங்கள் மதத்துக்காக.. நாங்கள் எங்கள் மதத்துக்காக’’ எனக் குறிப்பிட்டுள்ளது. திடீரென முக்கிய வெப்சைட்கள் ஹேக் செய்யப்பட்டாலும் பல வெப்சைட்களை மீண்டும் பழைய நிலைக்கு சைபர் கிரைம் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஒருவர், இந்த ஹேக்கிங் சற்று அட்வான்ஸாக இருக்கின்றன. இவை தகவல்களை திருடும் ஹேக்கிங் மாதிரியும் உள்ளன. குறிப்பாக இஸ்ரேல் தூதுர வெப்சைட் ஹேக்கிங் செய்யப்பட்டபோது தனிப்பட்ட தகவல்களையும், பாஸ்போர்ட் விவரங்களையும் அவர்கள் திருடி வெளியிட்டுள்ளனர். இது மாதிரியான ஹேக்கிங்கைத் தடுக்கும்விதமாக இன்னும் நாம் பலமாக மாற வேண்டும் என்றார்
உலகநாடுகள் எதிர்ப்பு..
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்தன.
இதற்கு மத்தியில், விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு தரப்பின் கருத்து மட்டுமே" என தெரிவித்தது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்