Gold Smuggling: இந்தியாவுக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 4 கிலோ தங்கம் - அலேக்காக மடக்கிய சுங்கத்துறை!
பாங்காக்கிலிருந்து இந்தியாவுக்கு கடத்திக்கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்க கட்டிகளை டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
உலகளவில் இந்தியாவிலும், சீனாவிலும் தான் தங்கம் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் எப்போதுமே தங்கத்துக்கான தேவை இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால் உள்நாட்டு தங்க தேவையை பூர்த்தி செய்ய தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே சமயம் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு அதிக வரி விதிக்கிறது.
தங்கக்கடத்தல்:
இதனால் வெளிநாட்டு சந்தையை காட்டிலும் உள்நாட்டில் தங்கத்தில் விலை அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு, துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை காட்டிலும் குறைவு. இதனால், கடத்தல் காரர்கள் துபாய் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் இருந்து தங்கத்தை வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
அதே நேரத்தில், தங்க கடத்தலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும், கடத்தல்காரர்கள் புது புது வழி முறைகளில் தங்க கடத்தலை ஜோராக மேற்கொண்டு வருகின்றனர்.
On the basis of profiling, Customs@IGI Airport have seized gold bars weighing 4204GMs valued at 2.24 Crores brought by One Indian national from Bangkok. The pax has been arrested under Customs Act, 1962. Further, investigations are underway. pic.twitter.com/qOQTd0uwGj
— Delhi Customs (Airport & General) (@AirportGenCus) November 20, 2023
அந்த வகையில் டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ. 2.24 கோடி மதிப்பிலான 4.204 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கச் சட்டம், 1962ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா பாணியை மிஞ்சும் வகையில், குளிர்பான அட்டையில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சுங்கத்துறை தொடர் நடவடிக்கை:
நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சார்பில் 2 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் மியான்மர், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021-22 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் 1,400 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 2000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாக கேரளா மாநிலத்தில் 755.81 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் 535.65 கிலோவும், தமிழ்நாட்டில் 519 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.