Drug Seizes: என்னாது 3 ஆயிரம் கிலோவா? குஜராத்தை அதிரவிட்ட போதை பொருள் கடத்தல் - பரபரப்பு!
குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
Crime: குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
3,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்:
இந்த நிலையில், குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. நேற்று (பிப்ரவரி 26) அன்று போர்பந்தர் அருகே சந்தேகத்திற்குரிய கப்பல் ஒன்றை கடற்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், 3,089 கிலோ சரஸ் (Charas) என்ற போதைப்பொருள், 158 கிலோ மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) மற்றும் 25 கிலோ மார்பின் (Morphine) ஆகியவற்றை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் 5 பேர் இருந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. இருப்பினும், சர்வதேச சந்தைகளில் ஒரு கிலோ சரஸின் விலை ரூ. 7 கோடியாக உள்ளது.
குஜராத்தை அதிரவிட்ட போதை பொருள் கடத்தல்
#IndianNavy in a coordinated ops with Narcotics Control Bureau, apprehended a suspicious dhow carrying almost 3300Kgs contraband (3089 Kgs Charas, 158 Kgs Methamphetamine 25 Kgs Morphine).
— SpokespersonNavy (@indiannavy) February 28, 2024
The largest seizure of narcotics, in quantity in recent times.@narcoticsbureau pic.twitter.com/RPvzI1fdLW
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர்பந்தருக்கு அருகே கடலில் இருந்த பாய்மரக் கப்பலில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் இது மிகவும் பெரியது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் கூட்டு முயற்சிகள் மூலம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் இந்திய துறைமுகத்தில் உள்ள சட்ட அமலாக்க முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஐந்து பேரை கைது செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், புனே மற்றும் டெல்லி முழுவதும் இரண்டு நாட்கள் சோதனையில் ரூ.2,500 கோடி மதிப்பிலான 1,100 கிலோ போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை கைப்பற்றிய ஒரு வாரத்திற்குள் குஜராத்தில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
8ஆவது முறையாக சம்மன்.. ஊழல் வழக்கில் விடாது துரத்தும் ED.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?