Manipur: மணிப்பூரில் மீண்டும் வன்முறை..ராணுவத்தை குறை சொன்ன பாஜக எம்எல்ஏ..நடந்தது என்ன?
ஏராளமான துணை ராணுவப் படையினர் இருந்த போதிலும், பிற மாவட்டங்களில் இருந்து தீவிரவாதிகள் கிராமத்திற்கு வந்து மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை, விஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட அப்பாவி கிராம மக்கள் மூவர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:
விஷ்ணுபூர் மாவட்டம் குவாக்டா அருகே உகா தம்பாக் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் தாக்குதல் நடத்த தொடங்கினர். சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், தந்தை, மகன் ஆகிய இருவரும், பக்கத்து வீட்டில் இருந்த மற்றொரு நபரும் தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "மூவரும் உறங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர், அரிவாளால் அவர்களின் உடலை சரமாரியாக வெட்டியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சுராசந்த்பூரில் இருந்து வந்துள்ளனர். மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு மண்டலத்திற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அத்துமீறி நுழைந்ததால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டிப்பாட்டில் உள்ளது" என தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தை குறை சொன்ன பாஜக எம்எல்ஏ:
இந்த விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு படையினரை சரிமாரியாக சாடியுள்ள மணிப்பூர் பாஜக எம்எல்ஏ இமோ சிங், "பாதுகாப்பு குளறுபடி காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பணியின் போது அலட்சியமாக செயல்பட்டதற்காக துணை ராணுவப் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏராளமான துணை ராணுவப் படையினர் இருந்த போதிலும், பிற மாவட்டங்களில் இருந்து தீவிரவாதிகள் கிராமத்திற்கு வந்து மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கிராமத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப் படை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். சில பாதுகாப்புப் படைகள் மக்களுக்கும், மாநிலத்துக்கும் இடையே அமைதியின்மையை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சருக்கு (அமித் ஷா) கடிதங்கள் எழுதி வருகிறோம்.
பாதுகாப்புப் படைகளின் சில பிரிவுகள் பிரச்னைகளை உருவாக்குகின்றன. உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாவிட்டால், மாநிலத்தில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்பாது" என்றார்.
மணிப்பூர் இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குக்கி பழங்குடி சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதுகாப்பு படையினர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.