Protest and Indian Democracy: போராட்டங்களே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள்!
நீங்கள் நேற்று எதேச்சையாக கடந்து சென்ற சில சாலைகள் கூட சாதி அடக்குமுறையை எதிர்த்துக் கேட்கும் மிகப்பெரிய போராட்டக்களமாக உருமாறலாம் - இந்திய ஜனநாயகம்
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதன் பலன்கள் குறித்து சில விவசாயிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
3 வேளாண் திருத்தச் சட்டங்கள் திரும்ப பெறப்படுகிறது!
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 19, 2021
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதன் பலன்கள் குறித்து சில விவசாயிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை!
- பிரதமர் திரு.@narendramodi pic.twitter.com/tQNrN5iecg
விவசாயப் பெருங்குடிகளின் இருத்தல் தான் இந்தியாவின் இருத்தல் என்று மகாத்மா காந்தி குறிப்பிடுவார். மத்திய அரசின் இந்த மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு விவசாய அமைப்புகள் கடந்த ஓராண்டு காலமாக நூற்றுக்கு நூறு விதம் கோட்பாட்டின் படியும், சற்றும் பிசாகமல் நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
1885ல் அரங்கேறிய சாந்தலர்கள் கிளர்ச்சித் தொட்டு இன்றுவரை அதிகாரத்துவ போக்கை கேள்விகேட்கும் குரலாய் வெகுஜன மக்களின் போராட்டங்கள் அமைகிறது. பிரதமர் கூறியதைப் போல, எந்தவொரு போராட்டங்களும் அர்த்தமற்று புரிதல் இல்லாமல் தானாக தோன்றிவிட முடியாது. என்ன செய்கிறோம்? யாரை எதிர்க்கிறோம்? சட்டத்திட்டங்களால் பெரும்பான்மை ஆதிக்க சக்திகளின் நிலை எப்படி உயரும்? என்ற பல்வேறு கேள்விகளுக்கான தேடலாய் இந்த போராட்டங்கள் தொடங்குகின்றன. நவீன இந்தியாவின் அடையாளங்களாக மாறிப்போன ஓங்கிய அதிகாரம் கொண்ட அரசையும், சாதி ஆதிக்கவாதிகளையும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளையும் எதிர்க்கும் காரியத்துடன் தான் அனைத்து போராட்டங்களுக்கும் நடைபெறுகிறது.
மௌனத்தைக் கலைக்கும் இந்தியர்கள்:
மௌனம் என்பது ஆதிக்கத்துக்கு ஆட்பட்ட நிலையின் அடையாளம் என்பது அரசியல் சிந்தனையாளர்களின் கூற்று. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இந்த மௌனம் கலைக்கப்பட்டு வருகிறது. நிர்பயா, ஜல்லிக்கட்டு , குடியுரிமை திருத்தச் சட்டம், ஜாட் இடஒதுக்கீடு, விவசாயிகள் என அனைத்துவகையான போராட்டமும் இந்தியாவின் அடையாளங்களாக மாறி நிற்கின்றன. இந்த அனைத்துப் போராட்டங்களிலும் சில ஒற்றுமையை நம்மால் காண முடிகிறது.
ஆதிக்க மனோபாவங்களை எதிர்க்கும் மக்கள் அனைவரையும் தீவிரவாத கும்பல், தேசத்துரோகிகள், சுயநல வாதிகள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள், கொலைக்கார கும்பல்கள், கலகக்காரர்கள் என்ற சொல்லாடலுக்குள் இந்த சமூகம் அடைத்து வைத்திருக்கிறது. தேர்தல் வாக்குச்சாவடி அரசியலை விட, இன்றைய கடற்கரைகளும், தேசிய நெடுஞ்சாலைகளும், நாடாளுமன்ற வளாகங்களும், ஷாஹின் பாக் தெருக்களும், அரசு அலுவலகங்களுக்கும் விளிம்புநிலை மக்களின் குறியீடாக மாறி நிற்கிறது. நீங்கள் நேற்று எதேச்சையாக கடந்து சென்ற சில சாலைகள் கூட சாதி அடக்குமுறையை எதிர்த்துக் கேட்கும் மிகப்பெரிய போராட்டக்களமாக உருமாறலாம். கிண்டலுக்கும், கேளிகளுக்கும் உள்ளாகி வரும் சில சமூக குழுக்கள் நாளை மிகப்பெரிய கிளர்ச்சியாளராகவும், சமூக முன்னோடியாகவும் மாறலாம்.
பிரதமர் நரேந்திர மோடியும் - போராட்டங்களும்:
தனக்கான ஆதரவு தளத்திலும், எதிர் தளத்திலும் நாட்டின் அதிகப்படியான இளைஞர்களை அரசியல் படுத்தியதில் இன்றைய பிரதமர் மோடிக்கும் முக்கிய பங்குண்டு. இந்திரா காந்தி தொடங்கி மன்மோகன் சிங் வரையிலான அரசியல் தலைவர்கள் இளைஞர்களை அரசியல்தன்மை அற்றவர்களாகவே (Depoliticisng) பார்க்க விரும்பினர் . ஆனால், மோடிக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்ற மையப்புள்ளியில் அரசியல் பிளவு உருவாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, பெரும்பாண்மை பலத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியது. தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் இதில் நீக்கப்பட்டது. மேலும், நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் புதிய மசோதாவில் அகற்றப்பட்டது. விசாயிகளின் குரல்வலையை நசுக்கும் இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தன. இதனையொட்டி, சட்டமசோதாவை திரும்பப்பெறுவதாக மோடி அறிவித்தார்.
அரசியல் தலைவர்களுக்கு எப்போது ஒருவகையான அரசியல் நெருக்கடிகள் தேவைப்படும் என்ற கூற்று உண்டு. சில நெருக்கடிகள் அவர்களின் அரசியல் இருத்தலையே முடித்து வைக்கும். ஆனால், சில நெருக்கடிகள் அவர்களின் அரசியல் பயணத்தை வீறு கொள்ள செய்யும். அவர்கள், அத்தகைய நெருக்கடியை கண்டு மனம் தளராமல், அதை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியை மேற்கொள்வார்கள்.
முத்தலாக், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, பண மதிப்பிழப்பு, 10% இடஒதுக்கீடு போன்ற நெருக்கடிகள் பிரதமர் மோடிக்கு அரசியல் வாய்ப்பை அமைந்தன. ஆனால், வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தி வரும் நெருக்கடிகள் கண்டிப்பாக இரண்டாவது வகையைச் சார்ந்தது இல்லை என்பது மோடிக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எனவே, தனது அரசியல் இருத்தலை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.