Maharastra: ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் மரணம்! மருந்துகள் பற்றாக்குறையா?
மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக பச்சிளங்குழந்தைகள் 12 பேர் உட்பட 24 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா ஆகும். இந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் புதியதாக பிறந்த 12 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் ஏற்பட்ட மருந்துகள் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு விவகாரம்:
நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த 12 குழந்தைகளில் 6 பெண் குழந்தைகளும் 6 ஆண் குழந்தைகள். அவர்களில் 6 பேர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், பிறர் கடந்த 24 மணி நேரத்திலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருந்து பற்றாக்குறை:
இந்த மருத்துவமனை ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மையம்" என்று கூறப்படுகிறது. ஆனால் 70 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஒரே சுகாதார மையமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கு நோயாளிகள் வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில சமயங்களில் நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், பல மருத்துவமனை ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையும் இருந்தது என அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாஃப்கைன் என்ற நிறுவனத்திடமிருந்து மருந்துகளை மருத்துவமனை வாங்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் கூறியுள்ளார். இதனால், நோயாளிகள் உள்ளூர் கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கிய பின்னரே, அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு & கோரிக்கை:
இதுதொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் லாவண்டே, ”நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மருந்து சப்ளை பற்றாக்குறை மட்டுமின்றி, மாநில அரசின் கவனக்குறைவும் தான் காரணம். பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் அரசுக்கு இது அவமானம்” என குற்றம்சாட்டியுள்ளார்.
சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி பேசியபோது, பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடினார். மருத்துவமனையில் நிகழ்ந்ததை தயவுசெய்து மரணங்கள் என்று அழைக்க வேண்டாம். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக மாநில அரசின் முழு அலட்சியத்தால் நடந்த கொலை" என்று கூறினார்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணயை நடத்துவதோடு, இதற்கு காரணமான அமைச்சர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.