169 கோவிட் பராமரிப்பு ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன - ரயில்வே அமைச்சகம்
மருத்துவ பணியாளர்களுக்கான இடம் மற்றும் கிருமிநாசினி மற்றும் உணவு ஏற்பாடுகளை ரயில்வே செய்யும். பெட்டிகளுக்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்பை மாநில சுகாதார அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்
கோவிட்டுக்கு எதிரான ஒருங்கிணைந்த போரில், 4000 கோவிட் பராமரிப்பு ரயில் பெட்டிகளை தயார் செய்துள்ள ரயில்வே அமைச்சகம், மாநிலங்களின் பயன்பாட்டுக்காக சுமார் 64,000 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோவிட் பராமரிப்புக்காக தற்சமயம் 169 பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாக்பூர் மாவட்டத்தில் இருந்து கோவிட் பெட்டிகளுக்காக புதிய கோரிக்கை வந்த நிலையில், நாக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் மற்றும் நாக்பூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து கோவிட் பராமரிப்பு ரேக்குகளுடன் கூடிய 11 ரயில் பெட்டிகளை ரயில்வே வழங்கும். மாற்றி அமைக்கப் பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட இந்த ஒவ்வொரு பெட்டியும் 16 நோயாளிகளை பராமரிக்கும் வசதி கொண்டவையாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, மருத்துவ பணியாளர்களுக்கான இடம் மற்றும் கிருமிநாசினி மற்றும் உணவு ஏற்பாடுகளை ரயில்வே செய்யும். பெட்டிகளுக்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்பை மாநில சுகாதார அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்.
மகாராஷ்டிராவில் உள்ள அஜ்னி ஐசிடி பகுதியில், மாநில அரசின் கோரிக்கையை தொடர்ந்து தனிமை வார்டு பெட்டிகளை ரயில்வே தயார் செய்கிறது. மகாராஷ்டிராவை தவிர டெல்லி, உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கோவிட் பராமரிப்பு பெட்டிகளை ரயில்வே அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள நந்துருபாரில், 57 நோயாளிகள் தற்போது இந்த வசதியை பயன்படுத்தி வரும் நிலையில் ஒருவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 322 படுக்கைகள் காலியாக உள்ளன.டெல்லியில், 1,200 படுக்கைகளுடன் கூடிய 75 பெட்டிகளை வழங்கி மாநில அரசின் கோரிக்கையை ரயில்வே நிறைவேற்றியுள்ளது.
இரண்டு பெட்டிகளை மத்தியப் பிரதேச அரசு கோரியிருந்த நிலையில், 320 படுக்கைகளுடன் கூடிய 20 பெட்டிகளை மேற்கு ரயில்வே வழங்கியுள்ளது.சமீபத்திய பதிவுகளின் படி, மேற்கூறிய மாநிலங்களில் 98 பேர் அனுமதிக்கப்பட்டு 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பராமரிப்பு ரயில் பெட்டிகளை 70 நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச அரசு ரயில் பெட்டிகள் எதையும் கோராத நிலையிலும், 800 படுக்கைகளுடன் கூடிய 50 பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.