டெல்லி அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் தாய்மார்கள் உயிரிழப்பு..! "பகீர்" அளிக்கும் புள்ளிவிவரங்கள்..!
டெல்லியில் உள்ள நான்கு பெரிய அரசு மருத்துவமனைகளிலும் ஒவ்வொரு மாதமும் 16 தாய்மார்கள் பிரசவத்திற்கு பிறகு உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஷா என்பவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, ராம்மனோகர் லோகியா மருத்துவமனை, சப்டார்ஜூங் மருத்துவமனை மற்றும் சுஷேதா கிரிப்லானி மருத்துவமனைகளில் 2015 மற்றும் 2021ம் ஆண்டு வரை எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என்று ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கு கிடைத்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
ஜனவரி 2015ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் மேற்கூறிய இந்த நான்கு மிகப்பெரிய மருத்துவமனைகளிலும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட 1281 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, சப்டார்ஜூங் மருத்துவமனையில் நிலைமை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது. கடந்த 81 மாத நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் பிரசவத்திற்கு பிறகு 11 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நான்கு மருத்துவமனைகளில் மேற்கூறிய காலகட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். குறிப்பாக, சப்டர்ஜூங் மருத்துவமனையில் 1.68 லட்சம் குழந்தைகள் இந்த காலகட்டத்தில் பிறந்துள்ளனர். ஆனால், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்கள் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளிக்கவில்லை. இந்த மருத்துவமனையில் ஆர்.டி.ஐ.யில் கேட்கப்பட்ட காலகட்டத்தில் 943 பெண்கள் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்துள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் உயிரிழப்பது குறைவாக பதிவாகியுள்ளது. 29 பெண்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். ஆர்.எம்.எல். மருத்துவமனையில் 59 பெண்களும், கிரிப்லான மருத்துவமனையில் 250 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று மருத்துவமனைகளிலும் அதிகளவு ரத்தப்போக்கு, செப்டிக் ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்றவை அறுவை சிகிச்சைக்கு பிறகான குழந்தை பிறப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நான்கு மருத்துவமனைகளிலும் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 16 தாய்மார்கள் குழந்தை பிறப்பிற்கு பிறகு உயிரிழக்கின்றனர் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீபத்தில் வெளியான பிரசவ உயிரிழப்பு புள்ளிவிவரப்படி, பிரசவத்தின்போதான உயிரிழப்பு விகிதம் 10 புள்ளிகளாக குறைந்து இருப்பது தெரியவந்தது. 2017-2019 காலகட்டத்தில் இந்த பாதிப்பு விகிதம் 103 ஆக பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பிரசவத்தின்போது தாய்மார்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்