Chandipura Virus: குழந்தகளை தாக்கும் சண்டிபுரா வைரஸ் - 16 பேர் உயிரிழப்பு, 50 பேர் பாதிப்பு - குஜராத் அரசு எச்சரிக்கை
Chandipura Virus: சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 பேர் உயிரிழந்த சம்பவம், குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chandipura Virus: சண்டிபுரா வைரஸால் இதுவரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, குஜராத் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சண்டிபுரா வைரஸ் பாதிப்பு:
குஜராத்தில் அதிகரித்து வரும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்த ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல், மாநிலம் முழுவதும் இதுவரை சண்டிபுரா வைரஸால் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 16 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஹிம்மத்பூரில் 14 சண்டிபுரா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூக சுகாதார நிலையங்களிலும் விழ்ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஆலோசனை:
குஜராத்தில் பல மாவட்டங்களில் சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மாநில முனிசிபல் கமிஷனர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் தலைமை மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனையும் நடத்தி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்த வகையான காய்ச்சல் பாதிப்புகளுக்கும், உடனடி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
சண்டிபுரா வைரஸ் என்றால் என்ன?
சண்டிபுரா வெசிகுலோவைரஸ், பெரும்பாலும் சண்டிபுரா வைரஸ் (CHPV) என்று குறிப்பிடப்படுகிறது. இது ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. கடந்த 1965 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகாராஷ்டிராவின் சண்டிபுரா மாவட்டத்தில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் முதன்மையாக கடுமையான மூளையழற்சி, குறிப்பாக குழந்தைகளில் கடுமையான மூளை அழற்சியை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்படுகிறது.
சண்டிபுரா வைரஸ் முதன்மையாக கொசுக்கள், உண்ணி மற்றும் மணல் ஈ போன்ற நோய்க்கிருமிகளால் பரவுகிறது. பாதிக்கப்பட்ட இந்த மணல் ஈக்கள் மனிதர்களைக் கடித்து, வைரஸை அவர்களின் ரத்த ஓட்டத்தில் செலுத்தும்போது தொற்று பரவுகிறது. மற்ற சாத்தியமான பரவும் முறைகள், குறைவான பொதுவானவை என்றாலும், பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்கின் உடல் திரவங்களுடனான தொடர்பு காரணமாகவும் தொற்று பாதிப்பு பரவலாம்.
சண்டிபுரா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பொதுவாக திடீரென்று தோன்றும் மற்றும் விரைவாக அதிகரிக்கும். அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளி கோமா நிலைக்கு செல்லலாம். நோய்த்தொற்று முதன்மையாக குழந்தைகளை பாதிக்கிறது மற்றும் விரைவாக அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். நோய் பாதிப்புகளை ஆரம்பகாலத்திலேயே கண்டறிதல் மற்றும் சிகிச்சை பாதிப்புகளை தடுக்க முக்கியமானது.