பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..
வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பழங்கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள முதல் அறையில் 52 பொருட்களும், இரண்டாவது அறையில் 47 பொருட்களும், புல்காரி ஆடை அறையிலிருந்தும் 12 பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர், “இந்த அருங்காட்சியகத்தில் சனி,ஞாயிறு இரவில் திருட்டு நடைபெற்று இருக்கலாம். எனினும் அருங்காட்சியக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திருட்டு தொடர்பாக எங்களிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தினோம். மேலும் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தோம்.
சிசிடிவியில் யாரும் வருவது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எனவே கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்கு பின்னால் இருந்த ஜன்னல் வழியாக வந்திருக்கக்கூடும். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் துறை அதிகாரிகளின் தகவல்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள், பித்தளை மணிகள், பழங்கால நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இவை திருடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 மாதங்களில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இரண்டாவது திருட்டு இதுவாகும். ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகத்தில் ஒரு திருட்டு நடைபெற்றது. அந்தச் சம்பவத்தின் போது ஒருவர் சிசிடிவி காட்சிகளில் பதிவாகிருந்தார். எனினும் அவரை இதுவரை காவல் துறையினரால் கைது செய்ய முடியவில்லை.
இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அருங்காட்சியகம் ஒன்றில் மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.