10 Killed In Landslide: மகாராஷ்டிராவில் கனமழையால் நிலச்சரிவு... உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு ...
மகாராஷ்டிரா மாநிலம் கலாபுர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு நதிகளில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. குண்டலிகா, அம்பா நதிகளில் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்கள் உள்ளன.
இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர்மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று , நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்து உள்ளது. 100-க்கும் அதிகமான போலீசார், மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடதிற்கு சென்று தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு உதவி செய்து வருகின்றனர். சில தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர் என ராய்காட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க