''பறவை மாதிரி மனுஷன் வாழணும்.. சுதந்திரமா'' - கிரா குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் நாட்டுப்புறவியல் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர் கி.ரா. ஆனால் அவர் தொடக்க கால பள்ளி கல்வியை முறையாக படித்து முடிக்காதவர். இருப்பினும் வாழ்க்கையின் ஓட்டத்தில் மண்ணையும் மக்களையும் நிறைய படித்த அவருக்கு சிறப்பு பேராசிரியர் பதவி மிகையாக இருக்கவில்லை.
கரிசல்காட்டு பிதாமகன் என்றழைக்கப்படும், கிரா குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.
1.கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் 1922 செப்டம்பர் 16ம் தேதி பிறந்தவர் கி.ரா. அவரின் முதல் கதை 1958ல் சரஸ்வதி இதழில் வெளியானது.
2.கரிசல் காட்டு எழுத்தாளன் கிராவின் எழுத்து ஆலமர விழுதைப் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. அது ஆலமரத்தின் வேர் தேடும் ஆழம் கொண்டவை. அப்படியாக மண் குறித்தும் மக்கள் குறித்தும் வேர் தேடி அலைந்தது கிராவின் பேனா. 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தை தமிழில் பதிவு செய்தவர்.
3.கரிசல் மண்ணின் பிதாமகன் என கிராவைச் சொல்லக்காரணம், கிரா ஒரு தீப்பொறி. கரிசல் மண்ணில் விழுந்த அந்தத் தீப்பொறியை மெல்ல பற்றி பற்றி ஒரு தீம்பிழம்பே உருவானது. கோணங்கி, பூமணி, சோ.தர்மன், மேலாண்மை பொன்னுசாமி, தேவதச்சன், தமிழ்ச்செல்வன் போன்ற ஏராளமான எழுத்தாளர்கள் கரிசல் காட்டு இலக்கியத்தை கி.ராவை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினர்.
4.கிரா புதுச்சேரியில் 1989 முதல் வசித்து வந்தார். அவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் நாட்டுப்புறவியல் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர். ஆனால் அவர் தொடக்க கால பள்ளி வாழ்க்கையை முறையாக படித்து முடிக்காதவர். ஆனால் வாழ்க்கையின் ஓட்டத்தில் மண்ணையும் மக்களையும் நிறைய படித்த அவருக்கு சிறப்பு பேராசிரியர் பதவி மிகையாக இருக்கவில்லை.
5.உள்ளூர் பேச்சு வழக்கிலேயே அந்த மண்ணையும், மக்களையும் நம் கண்முன்னே கொண்டு வருவது கிராவின் ஸ்டைல். பல்கலைக்கழக நாட்களில் அவர் புதுச்சேரியின் 200 நாட்டுப்புற கதைகளை சேகரித்து பதிவு செய்தார்.கதைகளை எழுதுவதை விட கதைகளை பதிவு செய்வது முக்கியம். எழுத்தில் மொழியின் தொனியும், அசல் சொல்லும் மாறலாம். அதில் தான் நாட்டுப்புற கதையின் ஜீவன் உள்ளது என்றார் கிரா.
6.தமிழகத்திற்கு குடிபெயர்ந்த தெலுங்கு மக்களை சித்தரிக்கும் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமியை வென்றார் கிரா. அந்த புத்தகத்தின் எழுத்தின் மொழியும், வார்த்தையும் தன் வாசனை மாறாமல் இருப்பதை இப்போது படித்தாலும் உணரலாம். இந்த நாவலில் ஒரு தெளிவான வடிவம் இல்லை என தொடக்க காலங்களில் விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்ட கோபல்லப்புரத்து மக்கள் இன்று தமிழில் சிறந்த நாவல்களின் ஒன்று. மொழியும், பேச்சுவழக்கும் ஏன் அதன் சாராம்சத்துடன் பதிவு செய்யப்ப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு சுவை என அலாதியாக பதில் தந்தவர் கிரா.
7.எழுத்தில் மட்டுமல்ல இசையிலும் பெரும் ஆர்வம் கொண்டவர் கிரா. அவரது படைப்புகளில் இசையும் ஓர் அங்கமாகவே இருந்தது. நாதஸ்வர வித்வான் கருக்குறிச்சி அருணாச்சலம், கிராவின் நண்பர். அருணாச்சலத்தின் மனைவி கிராவின் ஊர்க்காரர். தன் மாமனார் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கருக்குறிச்சி அருணாச்சலமும், கிராவும் இசையில் மூழ்குவார்கள். அருணாச்சலம் மூலம் கிடைத்த அறிமுகம் தான் விளாத்திகுளம் சுவாமிகள். கிரா நேரடியாக இசை பயின்றது விளாத்திகுளம் சுவாமிகளிடம் தான்.
8.சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமி கிராவின் பால்யகால நண்பர். வேலை நிமித்தமாக அழகிரிசாமி வெளியூர் செல்ல இருவரும் பரஸ்பரமாக எழுதிக்கொண்ட கடிதங்கள் ஏக பிரசித்தம். அதில் அழகர் சாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டே அன்னம் வெளியீடாக வெளிவந்தது. பால்யகால நண்பர்கள் எழுத்துலகில் சாதித்து சாகித்ய அகாடமி பெற்ற பெருமையும் கிரா-அழகிரிசாமி நட்பையே சேரும்.
9. உடலும் தோலும் தளர்ந்தாலும், அவரது எழுத்தில் தளர்வில்லை என நிரூபித்து காட்டியவர் கிரா. சமீபத்தில் ஆண் - பெண் உறவுகளைப் பேசும் அண்டரெண்டப்பட்சி என்ற புதினத்தை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்டிருந்தார்.
10.மொழி, எழுத்து, இசை என நின்றுவிடாத கிரா, அரசியல் தாகமும் கொண்டவர். இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றியவர்.
பறவைகள் மாதிரியே மனுஷங்க வாழனும்.. கட்டுப்பாடு இல்லாம சுதந்திரமா என்பது கிராவின் வாழ்க்கைக்கான வார்த்தைகள். எழுத்தாலும், மொழியாலும் ஊரெல்லாம் சுற்றிப்பறந்த பறவை இன்று ஓய்வு பெற்றுள்ளது.