லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை: தலைமறைவாக இருந்த அதிகாரி கைது..!
3 நாட்களாக தேடி வந்த நிலையில் மகேஸ்வரன் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக வந்த பொழுது பேரளம் காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான ஓவர்சியரை காவல்துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மகேஸ்வரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தை சேர்ந்த லதா என்பவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கான தவணைப் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஓவர்சியர் மகேஸ்வரன் லதாவின் மகன் மணிகண்டனிடம் ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வீட்டிற்கான மூன்றாவது தவணை பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மகேஸ்வரன் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறி சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து வீடியோ பதிவிட்டு மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து லஞ்சம் வாங்கிய ஓவர்சியர் மகேஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் செய்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பேரளம் காவல்துறையினர் அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஓவர்சியர் மகேஸ்வரனை 2 தனிப்படைகள் அமைத்து கடந்த 3 நாட்களாக தேடி வந்த நிலையில் மகேஸ்வரன் திருவாரூர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக வந்த பொழுது பேரளம் காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மகேஸ்வரன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களுக்கு எந்த அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலும் உடனடியாக ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மகேஸ்வரனிடம் பேரளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து அரசு அலுவலர்களிடம் பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்த்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அரசு திட்டத்திற்கு தகுதியானவரா என உறுதி செய்யப்பட்ட பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களின் விண்ணப்பத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.