“வீட்டில் இருந்தபடியே மாற்றுத் திறனாளி தாயை பராமரிக்கும் மகன்” ஆட்சியர் அலுவலகம் வந்து என்ன சொன்னார் தெரியுமா?
மனு கொடுக்க வந்த போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி, பாதுகாவலரை அழைத்து வீல் சேரில் உட்கார வைத்த ஆட்சியர்
மாற்றுத் திறனாளி தாயுடன் இருக்க வீடில்லாமல், அவதிப்பட்டு வரும் இளைஞர்-இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
மாற்றுத்திறனாளி தாயுடன் மனு கொடுக்க வந்த வாலிபர்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வகுத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் தனது மாற்றுத் திறனாளி தாய் தீர்த்தம்மாளுடன் வசித்து வருகிறார். தாய் மாற்றுத் திறனாளியாக இருப்பதால், எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், தாயை பராமரித்துக் கொண்டு கண்காணித்து வருகிறார். மேலும் எங்காவது வெளியே செல்ல வேண்டுமென்றால், நடக்க முடியாத தனது தாயை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், வெளியே சென்று வேலை பார்த்து வருவாய் ஈட்ட முடியாத சூழலில் உள்ளார். இதனால் போதிய வருவாய் இல்லாமல், அன்றாடம் உணவுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.
சொந்த வீடு இல்லாமல் உறவினர் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி தாயுடன் வாலிபர்
இந்த நிலையில் உடன் பிறந்தவர்கள் சொந்த பந்தம் என யாரும் ஆதரவு இல்லாத நிலையில், இருக்க இடமின்றி கிராமத்தில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்க கிராமத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது சாலையோரமாக, குடிசை அமைத்து, மாற்றுத் திறனாளி ஆன தாயுடன் வசித்து வருகிறார்.
புறம்போக்கு நிலம் இரண்டு சென்ட் கொடுங்க போதும்
இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 8 செண்ட் புறம்போக்கு நிலத்தில், ஆதரவில்லாத தனக்கு 2 செண்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள வீல் சேரில் தனது தாயே அமர வைத்து, ரவியே வீல் சேர்வை தள்ளியவாறு, மாவட்ட ஆட்சியரை சந்திக்க கூட்ட அரங்கிற்கு சென்றார்.
மனு கொடுக்கும் போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி
அப்பொழுது பொதுமக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுக்கும் பொழுது மாற்றுத் திறனாளியான தீர்த்தம்மாள் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் தீர்த்தம்மாவை தாங்கி பிடித்து வீல் சேரில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து, மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனால் இதுபோல பலமுறை, வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை இவர்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் திருமணம் செய்யும் நிலையில், சொந்தமாக வீடில்லாததால், பெண் கொடுப்பதற்கு சிலர் யோசிக்கின்றனர். இதனால் தனக்கு மிகுந்த மன வேதனை ஏற்படுகிறது. இதனால் இன்று மாற்றுத் திறனாளி தாயை அழைத்துக் கொண்டு ரவி, மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தார். மேலும் கடந்த 5 மாதமாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளேன்.
ஆனால் எனது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இருக்க வீடில்லாமல், மாற்றுத் திறனாளி தாயை வைத்துக் கொண்டு, மிகுந்த சிரமம்பட்டு வருகிறேன். எனவே எங்கள் கிராமத்தில் உள்ள 8 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில், 2 செண்ட் வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.