அதிர்ச்சி! வெடித்து சிதறிய ‘பைக்’ பெட்ரோல் டேங்க்.. பதறிய மக்கள் - கூலி தொழிலாளி படுகாயம்
அரூரில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து கூலி தொழிலாளி படுகாயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு.
அரூரில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதில் கூலி தொழிலாளி வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானுரைச் சேர்ந்த ராஜ்குமார், (38 ) என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். ராஜ்குமார் வெளியூர் வேலைக்கு செல்லும் போது, வழக்கமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பேருந்தில் சென்றுவிடுவார். இந்நிலையில் வழக்கம் போல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பேருந்து ஏறி வேலைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து இரண்டு நாளைக்கு பிறகு நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு, அரூர் வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது வாகனத்தில் பெட்ரோல் இல்லாதது தெரியவந்துள்ளது. பின்னர், பெட்ரோல் வாங்கி வந்து இருசக்கர வாகனத்திற்கு ஊற்றியுள்ளார். இதனை தொடர்ந்து வாகனத்தை குலுக்கிவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார்.
அப்போது திடீரென இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியுள்ளது. அதில் ராஜ்குமாரின் வயிற்றில் ஆழமாக வெட்டு விழுந்துள்ளது. மேலும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தின் டேங்க் வெடித்ததில், ராஜ்குமார் படுகாயத்துடன் கிடந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்திருந்த ராஜ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அரூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்சார இருசக்கர வாகனங்கள் மட்டுமே தீ பற்றி எரிவது போன்ற விபத்துகள் ஏற்பட்ட நிலையில், அரூர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடத்திற்கு முன்பு, இதே இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில், மர்ம நபர்கள் கை குழந்தையை வைத்து விட்டு சென்ற சம்பவம் நடைபெற்றது. அப்போது பைக் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், இதுவரை கண்காணிப்பு கேமிரா பொருத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்த சம்பவம் தொடர்பாக அரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.