PM Modi Trichy Visit LIVE: திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
PM Modi Trichy Visit LIVE Updates: பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார்
LIVE
Background
PM Modi Trichy Visit: திருச்சி விமான நிலையத்தின் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.
பிரதமர் திருச்சி வருகை:
திருச்சி விமான நிலையத்தில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். அதோடு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் மோடி தமிழகம் வருவது பாஜக தொண்டர்களுக்கு உந்துகோலாக அமையும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா:
டெல்லியில் இருந்து காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் 33 பேருக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
திருச்சி விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும் மோடி:
தொடர்ந்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். அதன்படி, விமானநிலைய புதிய முனையம், சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் மற்றும் திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.
அடிக்கல் நாட்டு விழா:
5 சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார். அதன்பிறகு மதியம் 1 மணியளவில் தனி விமானத்தில், லட்சத்தீவுகள் செல்கிறார்.
பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்:
பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் புதிய சக்தி பிறக்கிறது- பிரதமர் மோடி!
எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன் என்று பன்னாட்டு விமான நிலைய முனைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழை நான் புகழாமல் இருப்பதில்லை: பிரதமர் மோடி பேச்சு
உலகில் எந்த இடத்திற்குச் சென்றாலும் தமிழை நான் புகழாமல் இருப்பதில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு என்று பிரதமர் முன்னிலையிலேயே முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
”புதியதோர் உலகம் செய்வோம்”
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ”புதியதோர் உலகம் செய்வோம்” என்ற பாரதிதாசனின் வரிகளை கூறியதோடு, ”எனது மாணவ குடும்பமே, மிக்க நன்றி” போன்ற தமிழ் வார்த்தைகளையும் குறிப்பிட்டார்.