புறம்போக்கு நிலத்தில், கிராம மக்கள் குடிசை போட்டு சமைத்து வருவதால் பரபரப்பு.
அரூர் அருகே 4 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலத்தில், கிராம மக்கள் குடிசை போட்டு சமைத்து சாப்பிட்டு வருவதால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 250-ம் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு இல்லாமல், ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வருவதாகவும் உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், அவதிப்படுவதாகவும் அதனால் கிராமத்தின் அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு தரிசு நிலம் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செங்கோட கவுண்டர் மற்றும் பெருமாள் கவுண்டர் ஆகிய இருவரும் இந்த குமாரம்பட்டி கிராமத்திற்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வந்து தனியாக நிலம் வாங்கி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலத்திற்கு அருகில் இருக்கும் சுமார் நான்கு ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்தும், அப்போது மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிலத்தை சீரமைத்து விவசாயம் செய்ய தொடங்கியுள்ளார்.
அந்த நிலத்தை குமாரம்பட்டி கிராம மக்கள் வீட்டுமனை இல்லாத குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து வந்துள்ளனர். அந்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் அந்த நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தை மட்டுமே சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபோன்று காலதாமதம் செய்து வந்ததால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் இன்று தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வரும் நிலத்தில் குடிசை அமைத்து அந்த குடிசையில் சமைத்து சாப்பிட்டு வந்ததை கிராம நிர்வாக அலுவலர் மூலம் அரூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வந்த தகவலின் பேரில் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கிராம மக்களிடம் அந்த நிலத்தை முறையாக அளவீடு செய்யப்படும். அதனால் உடனே குடிசைகளை அப்புறப்படுத்துங்கள் என்று வட்டாட்சியர் சொன்னபோது ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வரும் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை கைப்பற்றி வீட்டுமனை இல்லாத மக்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போட்டிருக்கும் குடிசைகளை அப்புறப்படுத்த மாட்டோம் என்று வட்டாட்சியர் முன்பு ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர்.
பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. வட்டாட்சியர் குடிசைகளை அகற்றுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பட்டா வழங்கினால் மட்டுமே குடிசைகளை அகற்றுவோம் என பொதுமக்கள் வட்டாட்சியரிடம் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் புறம்போக்கு நிலத்தில் 40க்கும் மேற்பட்ட குடிசைகளை கிராம மக்கள் போட்டதாக காவல்துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கூறுவதால் பரபரப்பு ஏற்பட்டது.