காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் - சட்ட நிபுணர்கள் ஆதங்கம்
சித்ரவதை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நாடு விஞ்ஞானத்திலும் நாகரீகத்திலும் அசுர வளர்ச்சியை நோக்கி சென்றாலும் அடிப்படையான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதற்கு அடித்தளமாக இருப்பது ஒரு மனிதன் சக மனிதனுக்கு இளைக்கும் சித்திரவதைகள் தான். அந்த வகையில் உலகம் முழுவதும் மனிதர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கிறது. சித்ரவதை என்பது உடலியல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ ஒவ்வொருவருக்கும் வலியும் வேதனையும் ஏற்படுத்தும் செயலாகும்.
திட்டமிட்டு ஒருவர் மீது மற்றொரு நபர் பிரயோகிக்கும் இந்த கொடுமையானது உலகம் முழுவதும் நிகழ்கிறது. ஆதிக்க மனப்பான்மையும் தத்தம் நிலைமையை தக்க வைப்பதற்கான சூழலும் இதற்கான பெரும்பான்மை காரணங்களாக உள்ளது.
உலகில் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் சித்ரவதைகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் சித்ரவதைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனித சமூகத்தின் அடிப்படையில் உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை அறம் மீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். எனவே சித்ரவதைகள் தடுக்கவும் அதிலிருந்து மீண்டு வரவும் ஆண்டுதோறும் விழிப்புணர்வு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச சித்ரவதை எதிர்ப்பு மற்றும் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனித உரிமைகள் சார்ந்த சட்ட நிபுணர்கள் கூறியதாவது:-
சித்ரவதை என்பது மிகவும் கொடுமையான ஒரு சொல் அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை பல்வேறு நிலைகளில் மக்கள் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் இந்தியாவை பொறுத்தவரை காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை என்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாக உள்ளது.
அடிப்பது, நிர்வாணப்படுத்துவது, காலில் உதைப்பது, லாடம் கட்டுவது, தொங்கவிடுவது, கழிவுகள் ஒட்டிய நீரில் தலையை மூழ்க வைப்பது, மூச்சை திணறவைப்பது, மிளகாய்த்தூளை பயன்படுத்துவது, சிகரெட் இரும்பு கம்பிகளால் சூடு வைப்பது, அந்தரங்க உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சுவது, நீண்ட நேரம் நிற்க வைப்பது, ஒற்றைக்காலில் நிற்க வைப்பது, காற்று புகாத சிறிய அறையில் அடைத்து வைப்பது, பெண்களை இழிவான முறையில் தாக்குவது, நகக்கண்களில் ஊசியை செலுத்தி வலியை ஏற்படுத்துவது, தூங்கவிடாமல் செய்வது நீண்ட நேரம் கண்ணை கட்டி வைத்திருப்பது, கண்ணுக்கு எதிரே மிகப் பிரகாசமான மின் விளக்கை வைப்பது, குடிக்க தண்ணீர் தர மறுப்பது, முடியை பிடித்து தூக்குவது போன்ற சித்ரவதைகள் நாட்டில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் தினமும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
இதுபோன்ற சித்ரவதைகள் அனுபவித்த ஒருவரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை கடுமையாக அனுபவித்திருப்பார். மனித உரிமை தொடர்பான அனைத்து சட்டங்களும் சித்ரவதைகளை தடை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை.
ஆனாலும் சித்ரவதைகள் என்பது தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. சித்ரவதை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே பொதுமக்களை சித்ரவதை செய்வதாக உறுதி செய்யப்படும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது தொடரும் கோரிக்கையாக உள்ளது. இது மட்டும் இன்றி அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையமும் பரிந்துரை செய்துள்ளது இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறினார்.