சொத்துக்காக வீட்டை எரித்து தம்பியை கொன்ற கொடூர அண்ணன் - போச்சம்பள்ளியில் பயங்கரம்
அப்பொழுதும் ஆத்திரமடங்காத கண்ணாயிரம் தோட்டத்திற்கு சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே சொத்து தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொண்ட விவசாயி அவரது வீட்டையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தாமோதரன் பள்ளி அருகே உள்ள சின்ன பாறையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி இவரது மகன்கள் கண்ணாயிரம் (65) பழனி (61) இருவரும் விவசாயிகள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணபதி இறந்துவிட்டார். தனது சொத்துக்களை மகன்களுக்கு முறையாக பிரித்துக் கொடுக்காமல் குறிப்பிட்ட பாகங்களை இருவரும் அனுபவித்து கொள்ளும்படி கூறிவிட்டார். இருவரும் தங்களுக்கான நிலத்தில் குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் பழனிக்கு நிலம் அதிகமாக உள்ளதாக கண்ணாயிரம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சமாதானம் செய்யும் கிராம மக்கள்
இருவரையும் கிராம மக்கள் சமாதானம் செய்து வந்தனர். பிரச்சனை தீவிரமானதால் கண்ணாயிரம் சொத்துக்களை பாகம் பிரிப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தீர்ப்பு தனக்கு மட்டும் தான் என கூறிய பழனி
இந்த வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என கிராம மக்களிடம் பழனி கூறிவந்துள்ளார். இதை அறிந்த கண்ணாயிரம் பழனி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
ஆத்திரமடைந்த கண்ணாயிரம்
இந்நிலையில் நேற்று மதியம் பழனியின் வீட்டிற்கு கண்ணாயிரம் சென்றபோது அங்கு யாரும் இல்லை. இதை அடுத்து தனது டூவீலரில் காரியமங்கலம் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோலை வாங்கி வந்து பழனியின் வீட்டின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
அப்பொழுதும் ஆத்திரமடங்காத கண்ணாயிரம் தோட்டத்திற்கு சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மறைத்து வைத்திருந்த கத்தி
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனியின் கை மற்றும் கழுத்து பகுதியில் சராசரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பழனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
ரத்த வெள்ளத்தில் பழனி
இதனை தடுக்க சென்ற பழனியின் மகன் பெரியசாமி (31) என்பவரையும் வெட்டிவிட்டு கண்ணாயிரம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை
பின்னர் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெரியசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே ஊருக்குள் பதுங்கி இருந்த கண்ணாயிரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு அண்ணனே தம்பியை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

