கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவர் தப்பியோட முயற்சி; கடைசியில் முறிந்தது கை தான்
டிரைவர் சாலையை கடந்து லாரியின் அருகே வந்தபோது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர் இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பினர்.
கிருஷ்ணகிரியில் லாரி டிரைவர் கொலையில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பிக்க முயன்ற கல்லூரி மாணவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைதான சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள நடனசேரி கிராமத்தை சேர்ந்தவர் எலியாஸ் (43). லாரி டிரைவரான இவர், சென்னை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கன்டெய்னர் லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை சுமார் 9 மணி அளவில் லாரி கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுபேதார் மேடு அருகே வந்தபோது எலியாஸ் லாரியை சாலையோரம் ஏத்திவிட்டு சாலையின் எதிர்ப்புறம் உள்ள கடைக்கு சென்று டீ குடித்துள்ளர். பின்னர் மீண்டும் சாலையை கடந்து லாரியின் அருகே வந்தபோது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர் இரும்புராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த மகாராஜா கடை போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் டூவீலரின் நம்பரை வைத்து விசாரித்து இந்த கொலையில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி சேர்ந்த பி. இ., இரண்டாம் ஆண்டு மாணவர் காதர் பாஷா மற்றும் படிக்காமல் ஊர் சுற்றி வரும் (17) வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைப்புச் சென்றனர். அவர்களிடம் எஸ் பி தங்கதுரை விசாரணை மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சாலையை கடந்து கடைக்கு டீ குடிக்க சென்றபோது, சாலையோரம் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூவீலர் மீது அவர் சிறுநீர் கழித்துள்ளதாக தெரிகிறது.
இதை பார்த்து டூவீலரின் உரிமையாளரான கல்லூரி மாணவன் காதர் பாஷா எலியாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எலியாஸ் கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு மீண்டும் லாரி எடுத்துச் செல்ல வந்த போது அங்கு டூ வீலரில் வந்த சிறுவனும் மாணவனும் சேர்ந்து கத்தியால் குத்தியும் இரும்புராடால் அடித்தும் எலியாசை கொலை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் போலீசார் தனித்தனி டூவீலரில் அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி, பெங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டூவீலர் இங்கிருந்து கல்லூரி மாணவன் குதித்து தப்பியோட முயன்றார்.
இதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் கேட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இது பற்றி போலீசார் கூறுகையில்:- கல்லூரி மாணவனுக்கு சிகிச்சை முடிந்த பிறகு அவருடன் சேர்ந்து சிறுவனும் சிறையில் அடைக்கப்படுவார் என்றனர். இதன் இடையே தொடர்ந்து சிறுவனிடம் கொலையில் வேறு யாருக்கேனும்தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.