ஏடிஎம் கொள்ளையில் கிடைத்த துணுக்கு; வடமாநில கும்பலை ரவுண்டு கட்டிய ஸ்பெஷல் டீம்
10 தனிப்படை அமைத்து விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளதாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.14.50 லட்சம் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதே போல் கடந்த 5ஆம் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோவில் ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நடத்தினர். இதற்கிடையே, ஞாயிறு அன்று கர்நாடக மாநிலம் வெள்ளந்தூர் மற்றும் ஆசான் மாவட்டங்களில் இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதிலிருந்து ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை நடந்த ஏடிஎம் இயந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து மூன்று மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் வடமாநிலங்களான அரியானா, குல்பர்கா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே ஓசூரில் ஏடிஎம் கொள்ளை நடந்த இடத்தில் திங்கட்கிழமை சேலம் சரக டிஐஜி உமா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஓசூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பாக முழு தகவலை நாளை 9ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு எஸ்பி தெரிவிக்க உள்ளார்.
குருபரப்பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது அரியானா மாநிலம் மே வாத் பகுதியைச் சேர்ந்த கும்பல் என்பதும் பிக்கப் வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஒரு சில குற்றவாளிகள் கைதான போதிலும் முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்படவில்லை. தற்போது ஓசூர், ஆந்திரா, கர்நாடகாவில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.59.50 லட்சம் கொள்ளை அடித்த கும்பல் குருபரப்பள்ளியில் கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார்