15 ஆண்டாக விலையே தெரியாமல் குறைந்து விலைக்கு காபி விற்பனை; ஏமாறும் மலைக் கிராம மக்கள்
வத்தல்மலையில் கடந்த 15 ஆண்டுகளாக காபி பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை காபி போர்டில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர்.
தருமபுரி அருகே வத்தல்மலையில் விளையும் காபியை விற்பனை செய்ய, போதிய வசதியில்லாததால், விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல், 15 ஆண்டுகளாக விலையே தெரியாமல், இடைத்தரகர்களிடம் குறைந்து விலைக்கு கொடுக்கும் மலைக் கிராம மக்கள். காபி போர்டு கூட்டுறவு சங்கம் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வத்தல் மலைப்பகுதியில், கொண்டகரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னாங்காடு, ஒன்றியக்காடு, மண்ணான்குழி, பெரியூர், குழியானூர், நாய்க்கனூர், கொட்டலாங்காடு, பால்சிலம்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 498 குடியிருப்புகள் உள்ளன. வத்தமலைப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் நிலவுவது போல், ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.
இந்த மலையில் வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். இக்கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில், சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காபி பயிரில், ஊடு பயிராக மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா பயிரிட்டு வருகின்றனர். நெல், சாமை, கேழ்வரகு, உள்ளிட்ட விவசாய பயிர்களையும் விளைவிக்கின்றனர். சில்வர்ஓக் மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
காபியை பொறுத்தமட்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பூ தொடங்குகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காபி அறுவடை செய்யப்படுகிறது. வத்தல் மலைப்பகுதியில் ஏக்கருக்கு 1 டன் காபி மகசூல் கிடைக்கிறது. இங்கு விவசாயம் செய்யும் மக்கள் பெரும்பாலானோர், தங்கள் நிலங்களில் காபி செடிகள் பயிரிட்டுள்ளனர். வத்தல் மலையில் ஆண்டுக்கு தன் கணக்கில் காப்பி அறுவடை செய்து ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த மலைகிராமங்களில், காபி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், அவற்றை விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது காபி அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் காபி அறுவடை செய்து வருகின்றனர்.
ஆனால் காபியை விற்பனைக்காக ஏற்காட்டில் உள்ள அரசு காபி வாரிய கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். ஆனால் வத்தல்மலையில் இருந்து ஏற்காட்டிற்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்வதற்கு போதிய வசதி இல்லை. மேலும் அதை விற்பனை செய்யும் அளவிற்கு மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. வத்தல்மலையிலிருந்து வாகனங்கள் வைத்து, ஏற்காடு எடுத்துச் செல்வதற்கு அதிக செலவாகும் என்பதால், இந்த மலைவாழ் மக்கள் வெளியில் எடுத்து செல்வதில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், ஏற்காட்டில் இருந்து நேரடியாக வத்தல்மலைக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் சிறிய விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை டன் கணக்கில் இடைத்தரர்களிடம் விற்பனை செய்கின்றனர். ஆனால் ஏற்காடு காபி போர்டில், என்ன விலை என்பது தெரியாமல், இடைத்தரகர்கள் சொல்கின்ற விலைக்கு கொடுத்து விடுகின்றனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ காபி 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் காபி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் அதனை உரம் வைத்து பராமரித்து, அறுவடை செய்து, பழங்களை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் செலவு, கூலி ஆட்கள் என கிலோவிற்கு சுமார் 200 முதல் 210 வரை செலவாகிறது. ஆனால் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்கின்ற பொழுது, விவசாயிகளுக்கு வெறும் 20 முதல் 30 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் சிறிய அளவிற்கு வருவாய் கிடைப்பதில்லை. ஆனால் விவசாயிகளிடமிருந்து வாங்கிச் செல்லும் இடைத்தரகர்கள், ஏற்காடு காபி போர்டில் அதிக விலைக்கு விற்கின்றனர். வத்தல்மலையில் கடந்த 15 ஆண்டுகளாக காபி பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை காபி போர்டில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியாமல் இருந்து வருகின்றனர். எனவே ஏற்காட்டில் காபி போர்டு உள்ளது போல, வத்தல்மலையில் காபி போர்டு அமைத்து கொடுத்தால், உற்பத்தி செய்யப்படும் காபி கொட்டைகளுக்கு நேரடியாக கொடுத்தால், விவசாயிகளுக்கு உரிய சந்தை விலை கிடைக்கும். காபி விலை தெரியவரும். இதனால் மலை கிராம மக்களின் வாழ்வாதாரமும் உயரும். எனவே வத்தல்மலையில் காபி போர்டு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.