"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
அரூர் அருகே விவசாய நிலத்தை ஆக்கிரமித்துக் கொட்டகை அமைத்து, கணவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் செங்கோடன்-பூங்காவனம் தம்பதியினர் தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு விவசாயிகள் குடும்ப சிறப்பு திட்டத்தின் மூலம் பூங்காவனத்திற்கு தமிழ்நாடு அரசு பட்டா வழங்கியது. இந்நிலையில் குமாரம்பட்டி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு நிலத்தில் விவசாயம் செய்து காலியிடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 25.05.24 ஆம் தேதி அன்று குமாரம்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து பூங்காவனம் பயன்பாட்டில் இருந்த விவசாய நிலத்தில் குடிசை அமைத்துள்ளனர்.
அதில் வாழை தென்னை மரங்கள் இருந்ததை பொருட்படுத்தாமல், குடிசை அமைத்துள்ளனர். மேலும் நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை அப்புறப்படுத்த கோரி, மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு மனு கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பூங்காவனத்தின் கணவர் செங்கோடன் மாலை பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு, பால் எடுத்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த பகுதியில் வந்த குமாரம்பட்டியை சேர்ந்த பரந்தாமன் என்பவர் செங்கோடன் மீது பைக்கை மோதி கீழே தள்ளி, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது செங்கோடன் காயத்துடன் கீழே விழுந்து சத்தமிட்டுள்ளார். அங்கு பால் எடுத்துச் சென்ற அம்மாசி என்பவர் சத்தம் போட்டதால், அங்கிருந்து பரந்தாமன் தப்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பரந்தாமன் மகன், செங்கோடனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அரூர் காவல் துறையினர் கத்தியால் குத்திய பரந்தாமன் மீது சாதாரண வழக்கை பதிவு செய்து, கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பூங்காவனம் குடும்பத்தினர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் ஸ்டீபன் ஜேசுபாதமிடம், தனது கணவர் செங்கோடனை கொலை செய்ய முயற்சி செய்த பரந்தாமன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை அவரை தப்ப வைக்கும் முயற்சியில் சாதாரண அடிதடி வழக்கை பதிவு செய்துள்ளது.
மேலும் கத்தியால் குத்தினார் என காவல் நிலையத்தில் தெரிவித்தால், பரந்தாமன் குத்திய கத்தியை போல் ஒரு கத்தியை வாங்கி வந்து காவல் நிலையத்தில் கொடுங்கள் என அலட்சியமாக கூறுவதாகவும், காவல் துறையினர் மீதும், கத்தியால் குத்தியவர் மற்றும் அவரை ஏவி விட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.