“லஞ்சம் தரலன மனுவை ஏற்கமாட்டேன்” - ரசாயனம் தடவிய நோட்டுகளால் கையும் களவுமாக சிக்கிய விஏஓ
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாய நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, கையும் களவுமாக பிடித்து கைது செய்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் குருபரஹள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கொட்டாபுளியானூரை சேர்ந்த சுதாகர்(38) என்பவர் மின் வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சுதாகருக்கு சொந்தமான, 10 சென்ட் விவசாய நிலம், அவரின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த காவிய தர்ஷினி என்பவரின் பெயரில், வருவாய் துறை ஆவணங்களில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது. இதனை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாய குறைதீர் கூட்டத்தில் பலமுறை சுதாகர் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டு சுதாகருக்கு பட்டா மாறுதல் செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த, 28ந் தேதி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் பெற ஆன்லைன் மூலம் சுதாகர் விண்ணப்பித்தார். இதற்கு குருபரஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அரூர் அடுத்த பே.தாதம்பட்டியை சேர்ந்த கதிரவன்(40), ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் அளிக்க வில்லை. இதனை தொடர்ந்து சுதாகர் கிராம நிர்வாக அலுவலர் கதிரவனை அணுகியுள்ளார். அப்போது கதிரவன், ஒப்புதல் அளிக்க தனக்கு ரூ.2000 தர வேண்டும் என சுதாகரிடம் கேட்டுள்ளார். இல்லையென்றால், மனு ஏற்காமல் நிராகரித்து விடுவேன் என தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர், லஞ்சம் கொடுக்க விரும்பாமல், தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.
அப்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் அறிவுரைபடி ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்களை வாங்கி சென்றுள்ளார். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கதிரவனை தொடர்பு கொண்டு பணம் தருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து காலை தென்கரைக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் கிராம நிர்வாக அலுவலர் கதிரவனிடம், ரசாயனம் தடவிய 500 ரூபாய் தாள்களை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான காவல் துறையினர் கதிரவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து தென்கரைக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து, கதிரவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் விவசாய நில பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இலஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை, இலஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.