சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் நகராட்சி? - போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத தருமபுரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பணிக்கு செல்லாமல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் 20,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வார்டுகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை
ஆனால் நகராட்சியில் பணியாற்றுகின்ற தூய்மை பணியாளர்களால் 33 வார்டுகளுக்கும் சரியான நேரத்தில் சென்று சுத்தம் செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது. மேலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ள சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகின்ற வகையில் இருந்துள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் புகார் அளித்ததன் அடிப்படையில், மாதங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தர்மபுரி நகராட்சியில் 120 தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டனர்.
பணி சுமை அதிகம் சம்பளம் குறைவு
இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.315 வீதம் தினக்கூலி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஊழியர்களுக்கு அதிக அளவு பணி இருப்பதால் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என ஒப்பந்த ஊழியர்கள் நகராட்சியில் தெரிவித்தனர்.
இதனைஅடுத்து தொழிற்சங்கத்தின் மூலமாக தொழிற்சங்கத்தின் மூலம் ஊதிய உயர்வு வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சியர் இதனை விசாரணை செய்து, தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 315 ரூபாய் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை உயர்த்தி, ரூ 410 என ஊதியம் அதிகரித்து வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு ஆணை வழங்கியுள்ளார். இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை
ஆனால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட ஊதியத்தை, உயர்த்தி வழங்காமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. அதே போல நகராட்சியில் ஓட்டுனர்களாக பணிபுரியும் 6 ஓட்டுநர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதனையும் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்குமாறு தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை.
ஊதியம் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்கள்
இதனை அடுத்து ஊதிய வழங்காத நகராட்சியை கண்டித்தும், இன்று வரை ஊழியர்களுக்கு மற்ற பண பயன்கள் குறித்து கணக்கு காட்டவில்லை என கூறி இன்று தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து மிகுந்த தருமபுரி சுந்தரம் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இந்த தகவலறிந்து வந்த காவல் துறை மற்றும் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வு விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் ஊதிய வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.